search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இயக்குனரை கொலை செய்ய சதி: நடிகை பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
    X

    இயக்குனரை கொலை செய்ய சதி: நடிகை பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை

    திரைப்பட தயாரிப்பாளரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    பிரபல இந்திப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான மதூர் பண்டார்கர் மீது நடிகை பிரீத்தி ஜெயின் கடந்த 2004ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2005-ம் ஆண்டு, இயக்குனர் மதூர் பண்டார்கரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் நடிகை பிரீத்தி ஜெயின், அவரது கூட்டாளிகள் நரேஷ் பர்தேஷி, ஷிவராம் தாஸ் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



    இவர்கள் மீதான வழக்கு மும்பையில் உள்ள செவ்ரீ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர், அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபிக்கப்பட்டதால், நடிகை பிரீத்தி ஜெயின், நரேஷ் பர்தேஷி, ஷிவ்ராம் தாஸ் ஆகியோருக்கு தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத நிலையில், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×