search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கட்டண உயர்வுக்கு தலைவர்கள் கண்டனம்
    X

    பஸ் கட்டண உயர்வுக்கு தலைவர்கள் கண்டனம்

    பஸ் கட்டண உயர்வுக்கு ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Busfarehike
    சென்னை:

    பஸ் கட்டண உயர்வை கண்டித்து தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தமிழகத்தில் கடந்த காலங்களில் இந்த அளவுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதில்லை. நகரப் பேருந்துகள் மற்றும் மாநகரப் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணம் 66 விழுக்காடும், அதிகபட்சக் கட்டணம் 58 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளன. புறநகர் பேருந்துகளின் கட்டணமும் இதே அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    புறநகர் பேருந்துகளின் குறைந்தபட்சக் கட்டணம் விரைவுப் பேருந்துகளில் 41 சதவீதம் அளவுக்கும், அதிசொகுசுப் பேருந்துகளில் 50 சதவீதம் அளவுக்கும், அதிநவீன சொகுசுப் பேருந்துகளில் 57 சதவீதம் அளவுக்கும், குளிர்சாதனப் பேருந்துகளில் 55 சதவீதம் அளவுக்கும், வோல்வோ பேருந்துகளில் 54 சதவீதம் அளவுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 உயர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறி பேருந்துக் கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இந்த காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல.

    இந்தக் காரணிகளால் ஏற்பட்ட இழப்பை விட அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழலாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும் ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும். ஊழலையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் தடுத்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும்.

    ஆனால், போக்குவரத்துக் கழகங்களில் ஊழலைத் தவிர வேறு எதுவும் நடக்காததால் தான் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த 7 ஆண்டுகளில் ரூ.20,488 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் ஏற்பட்ட இழப்பை அப்பாவி மக்கள் தலையிலும், பயணிகள் தலையிலும் சுமத்துவது நியாயமற்றது.

    ஒருவேளை தவிர்க்கவே முடியாமல் பேருந்துக் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்றால் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயர்த்தியிருக்கலாம். ஆனால், 7 ஆண்டுகளில் 50 சதவீதம் அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகக் கூறும் தமிழக அரசு ஒரே முறையில் 66 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய பேருந்துக் கட்டணங்களில் கூட வெளிப்படைத் தன்மை இல்லை.

    புறநகர் பேருந்துகளுக்கான குறைந்த பட்சக் கட்டணம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான கட்டண விபரம் அறிவிக்கப்படவில்லை. இதன்மூலம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிகக் கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

    பேருந்துக் கட்டண உயர்வுகள் மட்டுமின்றி, விபத்து-சுங்கவரி என்ற பெயரில் பயணிகளிடம் ரூ.10 வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் பகல் கொள்ளைக்காரனை விட மிக மோசமான முறையில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்க தமிழக அரசு ஆயத்தமாகி உள்ளது.

    அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ற வகையில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணங்களை உயர்த்துவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக ஆட்சியாளர்கள் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தருவதில்லை. அரசுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,509 பேருந்துகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்குவதற்கு தகுதியற்றவை ஆகும். பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தராத அரசுக்கு பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கு எந்த தகுதியும் இல்லை.

    எனவே, தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழலை ஒழித்து, வருவாயைப் பெருக்கி போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கவும், சேவையின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    தற்போது பேருந்துக் கட்டணங்கள் ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தப்பட்டிருக்கின்றன. அதற்கு டீசல் விலை உயர்வு காரணமாகக் காட்டப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதிலும் அதற்கேற்ப விலையைக் குறைக்காமல் வரியைப் போட்டுள்ளனர்.

    இவர்களால்தான் டீசல் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டண உயர்வுக்கு இவர்களால் உயர்த்தப்பட்ட டீசல் விலை உயர்வையே காரணம் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

    ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மக்கள்தான் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஏற்கனவே வி‌ஷமாக ஏறும் விலைவாசி உயர்வால் மூச்சுத் திணறுகிறார்கள். அவர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல இந்தப் பேருந்துக் கட்டண உயர்வு அமைந்துள்ளது.

    பேருந்துக் கட்டண உயர்வால் அனைத்துவிதமான விலைகளும் உயரும். அது வறுமையைக் கூட்டும். இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள்தான்.

    இந்தக் கட்டண உயர்வை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க முடியாது. உடனடியாக இதை முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

    ஏற்கெனவே, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை என வகை பிரித்து மறைமுகமாகக் கட்டணங்களை அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெள்ளை போர்டு பேருந்தின் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5லிருந்து ரூ.6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் விரைவு பேருந்து ரூ.17லிருந்து ரூ.24ஆகவும், அதிசொகுசு பேருந்து ரூ.18லிருந்து ரூ.27ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வின் மூலம் மக்கள் மீது பெரிய சுமையை ஏற்றியுள்ள தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

    பேருந்து கட்டணத்தை உடனே திரும்ப வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    அன்றாட போக்குவரத் துக்கு பேருந்தில் பயணிக்கும் சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு 1 ரூபாய் உயர்வு என்பதும் சிரமத்தையே ஏற்படுத்தும். அப்படி இருக்கும்போது சாதாரண மக்கள் பயணம் செய்கின்ற அரசு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டண உயர்வு ரூ.1 முதல் அதிக பட்ச கட்டண உயர்வு ரூ.7 ஆக மாற்றியிருப்பது பெரும் சுமையாக அமைகிறது.

    ஏற்கனவே பொருளாதார சுமையில் சிரமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு பேருந்து கட்டண உயர்வு கூடுதல் சுமையாக அமைகிறது.

    எனவே தமிழக அரசு தற்போது அறிவித்த பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற்று பொது மக்களுக்கு அரசு பேருந்துகளை சேவை மனப்பான்பான்மையோடு இயக்க முன்வர வேண்டும். #Tamilnews
    Next Story
    ×