search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த முகத்துக்கும் கடிவாளம் தேவை தான்!- தலையங்கம்
    X

    இந்த முகத்துக்கும் கடிவாளம் தேவை தான்!- தலையங்கம்

    சமூக வலைத்தளங்களால் எவ்வளவு நன்மை கிடைக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் போனசாக கிடைக்கிறது. இதனால் தான் உலகமே அல்லாடுகிறது.
    சென்னை:

    காலையில் எழுந்ததும் ஒரு கையில் காபி டம்ளர்! இன் னொரு கையில் செல்போன்! இது தான் இன்றைய தலைமுறையின் ‘லைப் ஸ்டைல்’.

    ஒரு மணிநேரம் முகநூலை பார்க்காவிட்டால் முகமே வாடிப்போகிறது. அந்த அளவுக்கு முகநூல் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் முக்கிய ஆதார ஸ்ருதியாகி இருக்கிறது.

    பேஸ்புக் என்ற பெயருக்கு முகநூல் என்ற பெயர் சூட்டியது எவ்வளவு பொருத்தம்....?.

    கண்காணாத தொலைதூர தேசங்களில் வாழ்ந்து முகம் பார்த்து பேச முடியாத அந்த காலத்தில் நூல்கள் தான் முகத்தையும் சமூகத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக விளங்கின. சொல்ல வேண்டியதையும், புரிய வேண்டியதையும் வார்த்தைகளால் வடித்து நூல்களாக தந்தார்கள்.

    அதனால் தான் நூல்கள் அவ்வளவு பெருமை பெற்றன. அதனால் தான் கவிஞர்கள் கூட நான் அனுப்புவது கடிதம் அல்ல. இதயம். அதில் இருப்பதெல்லாம் எழுத்தும் அல்ல. எண்ணம் என்றார்கள்.

    அடுத்த கட்ட வளர்ச்சியில் நூல்கள் செய்யும் பணியை சமூக வலைத்தளங்கள் தனதாக்கி கொண்டன. சமூகத்தில் முகம் மட்டுமல்ல அனைத்தையும் பிரதிபலிப்பதால் முக நூலாகி இருக்கிறது போலும்.

    தகவல் பரிமாற்றம், கருத்து பரிமாற்றம், உணர்வுகளை வெளியிடுதல், பொழுது போக்கு என்று அத்தனை அம்சங்களையும் முகநூல் மூலம் பார்க்கலாம், படிக்கலாம், பரிமாறலாம், மகிழலாம். முகநூல் மூலம் உலகின் அனைத்து மூலைகளும் இணைந்திருக்கின்றன.

    உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் மறுகணமே உலகின் பார்வைக்கு வந்து விழுகிறது. சமூக வளர்ச்சிக்கான அடையாளமாகவும் தளமாகவும் முகநூலை கருதினாலும் சமூக அவலங்களுக்கான காரணியாகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

    முகம் தெரியாதவர்கள் கூட முகநூல் மூலம் குடும்பத்தில் ஒருவராகி விடுகிறார்கள். ஆனால் முகம் சுளிக்க வைக்கும் பல சம்பவங்களை பார்க்கும் போது இதை தடுக்க முடியாதா என்ற ஆதங்கம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

    பாலையும் தண்ணீரையும் பிரித்தாலும் கூட சமூக வலைத்தளங்களில் கொட்டி கிடக்கும், நல்லதையும் , கெட்டதையும் பிரிக்க முடியாது போல் தெரிகிறது. காரணம் நிஜமும், நிழலும் சேர்ந்த கலவை அது. நிஜத்தில் இருந்து நிழலை பிரிக்க முடியுமா?

    சமூக வலைத்தளங்களால் எவ்வளவு நன்மை கிடைக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் போனசாக கிடைக்கிறது. இதனால் தான் உலகமே அல்லாடுகிறது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறும் போது. சமூக வலைத்தள கருத்துக்கள் சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில், மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வி‌ஷயத்துக்கும் மாற்றுக்கருத்துக்களை உருவாக்கி பரப்பப்படுகிறது. இதற்கு ஒரு ஒழுங்கு நிலை வர வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

    இந்த எச்சரிக்கை உணர்வு எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒழுங்கு படுத்துவதில் தான் சிக்கல்கள் ஏற்படும்.

    முகநூல் பக்கத்தில் யார் வேண்டுமானாலும் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கலாம். போலியான பெயரிலும் உருவாக்கலாம்.

    இதனால் தான் கருத்துக்களும், தேவையற்ற காட்சிகளும் இஷ்டத்துக்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

    தவறு இழைப்பவர்களை கண்டு பிடிப்பது சைபர்கிரைம் போலீசுக்கே சவாலாக அமைந்து விடுகிறது.

    இதை கட்டுப்படுத்த முகநூல் கணக்கு தொடங்க ஆதார் அவசியம் என்ற அறிவிப்பு காலத்தின் கட்டாயம் என்று வரவேற்க வேண்டும். அரசின் சேவைத்திட்டங்களுக்கு மட்டுமே ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

    இதை அடிப்படையாக வைத்து ஆதார் அவசியம். ஆனால் கட்டாயம் இல்லை என்று பேஸ்புக் நிறுவனமும் தெரிவித்துள்ளது. ஆனால் கட்டாயம் ஆக்குவதில் தவறு இல்லை என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

    தறிகெட்டு ஓடும் குதிரையை கட்டுப்படுத்தி ஓட வைக்க கடிவாளம் தேவைப்படுகிறது. அது குதிரைக்கு தேவையில்லை என்று நினைத்தால் நம்பி சவாரி செய்பவரை குப்புற தள்ளிவிடும் என்பதை உணர வேண்டும்.

    அதே போல் தான் பேஸ்புக் என்ற முகத்துக்கும் ஆதார் என்ற கடிவாளம் தேவைப்படுகிறது. இதன் மூலம் ஓரளவாவது கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    பரீட்சார்த்த முறையில் இந்த திட்டத்தை அமல்படுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டு நலன் கருதி இதை ஒரு கட்டாய பரீட்சையாகவே பேஸ்புக் நிறுவனம் மாற்ற வேண்டும். சமூக நலனில் அக்கறை கொண்ட எல்லோரும் நிச்சயமாக வரவேற்பார்கள்.
    Next Story
    ×