search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசின் அதிரடி அனைத்து துறைகளுக்கும் வேண்டும்!- தலையங்கம்
    X

    அரசின் அதிரடி அனைத்து துறைகளுக்கும் வேண்டும்!- தலையங்கம்

    அரசு அதிகாரிகளை மட்டுமே குறி வைக்காமல் அனைத்து துறை ஊழியர்களிடமும் சொத்து விவரங்களை கறாராக கேட்டால்தான் மத்திய அரசின் இலக்கு உண்மையிலேயே பூர்த்தியாகும்.
    சென்னை:

    இந்தியாவில் 5 ஆயிரத்து 4 பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளின் உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.

    ஆட்சியை நடத்துவது அரசியல்வாதிகள் என்றாலும் அதிகாரத்தை முறைப்படி நெறிப்படுத்தி செயல்படுத்துவது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான். மாவட்டங்களின் வளர்ச்சிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் திட்டமிட்ட பணிகளில்தான் உள்ளது.

    இத்தகைய சிறப்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது அடிக்கடி சில விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுவது உண்டு.

    அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையை தவிர தற்போது மத்திய அரசு அவர்கள் மீது புதிய அதிரடி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதை வலியுறுத்தி மத்திய நிர்வாகம் மற்றும் பயிற்சி துறை சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. அந்த கடிதத்தில், “ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்துக்கள் விவரங்களை ஜனவரி 31-ந்தேதிக்குள் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மத்திய அரசின் வேறு பதவிகளுக்கோ, வெளிநாட்டு பணி நியமனங்களுக்கோ பரிசீலிக்கப்பட மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சொத்து விவரங்களை தெரிவிக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பதவி உயர்வு பெற வேண்டுமானால் ஊழல் கண்காணிப்புத்துறையின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆன்லைன் மூலம் சொத்து விவரத்தை தாக்கல் செய்ய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாத இறுதிக்குள் சுமார் 5 ஆயிரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து நிலவரம் மத்திய அரசுக்கு ஓளரவு முழுமையாக, தெளிவாக தெரிந்து விடும்.

    மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை காரணமாக உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் கறைபடியாத கரத்துடன் இருப்பது உறுதி செய்யப்படும். அதுமட்டுமின்றி மத்திய அரசின் பணிகள் தொய்வு இன்றி நடப்பதற்கும் இது மறைமுகமாக உதவியாக இருக்கும்.

    மத்திய அரசு சமீபகாலமாக சீர்திருத்த நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண மதிப்பு இழப்புக்கு பிறகு பண பரிவர்த்தனையில் அதிக கவனம் செலுத்துகிறது. அதுபோல ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பிரச்சனைகளிலும் ஒரு தெளிவான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. எதிர்வரும் காலங்களில் இது மிகவும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே மத்திய அரசு உணவு கலப்பட தடுப்பு சட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளது. உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் இருந்தால் அதுபற்றி எங்கெங்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு களம் இறங்கி உள்ளது.

    அதுபோல சட்ட விரோத பண புழக்கத்துக்கு எதிராகவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரமாக உள்ளது. சமீபத்தில் எந்த வர்க்கத்திலும் ஈடுபடாத சுமார் 2 லட்சம் போலி நிறுவனங்களை மத்திய அரசு கண்டு பிடித்து முடக்கியது. இதன் காரணமாக உண்மையான நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வழிவகை ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் பெரும்பாலானவர்களுக்கு கசப்பு மருந்தாக இருந்தாலும் அவை நாட்டு மக்களுக்கு பயன் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் மத்திய அரசு உயர் அதிகாரிகளுக்கு சொத்து விவரம் கேட்டு கெடு விதித்து இருப்பது போல அனைத்து துறை உயர் அதிகாரிகளிடமும் இதே அதிரடி நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் அதிகார வர்க்கத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத சுத்தமான நிலையை கொண்டுவர முடியும்.

    எதிர்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளும் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்து தப்ப முடியாதபடி சொத்து விவரங்களை காண்பிக்க சட்டம் கொண்டு வந்தால் அது ஊழலை ஒழிப்பதற்கு மேலும் கை கொடுக்கும். அரசு அதிகாரிகளை மட்டுமே குறி வைக்காமல் அனைத்து துறை ஊழியர்களிடமும் சொத்து விவரங்களை கறாராக கேட்டால்தான் மத்திய அரசின் இலக்கு உண்மையிலேயே பூர்த்தியாகும்.
    Next Story
    ×