search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயலில் சிக்கி வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கிய 2011 மீனவர்கள் பட்டியல்
    X

    ஒக்கி புயலில் சிக்கி வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கிய 2011 மீனவர்கள் பட்டியல்

    ஒக்கி புயலில் சிக்கி வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கிய 2011 மீனவர்களின் பெயர் விவரமும், அவர்கள் சென்ற படகின் முகவரியும் கன்னியாகுமரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். 

    இவர்கள் கரையில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவு முதல் 200 கடல் மைல் தொலைவு வரை சென்று மீன்பிடித்து வருவார்கள். சிறு விசைப் படகுகள் 10 நாட்கள் வரையிலும், பெரிய விசைப்படகுகள் 30 நாட்கள் வரையிலும் ஆழ்கடலில் தங்கி இருப்பார்கள்.

    இப்படி கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடந்த 30-ந்தேதி குமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயலில் சிக்கிக் கொண்டனர்.

    ஆழ்கடலில் வீசிய சூறைக்காற்றும், அலைகளின் கொந்தளிப்பும் மீனவர்களின் படகுகளை தள்ளாட வைத்தது. 100-க்கும் மேற்பட்ட படகுகள் குமரி கடற்கரையில் இருந்து வெளி மாநில கடற்கரைகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

    சில படகுகள் அலைகளின் ஆக்ரோ‌ஷத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் உடைந்து சிதறியது. அதில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.

    டிசம்பர் 1-ந்தேதியில்தான் குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகிய தகவல் மாவட்ட மீனவர் அமைப்புகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் மத்திய, மாநில அரசுகள் இணைந்து மாயமான மீனவர்களை மீட்டுத்தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.


    இதையடுத்து இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட னர். ஹெலிகாப்டர், விமானம் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் நடந்த தேடுதல் வேட்டையில் 100-க்கணக்கான மீனவர்கள் மீட்கப்பட்டனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மராட்டியம், குஜராத், கோவா, கர்நாடகம், லட்சத்தீவுகளில் கரை ஒதுங்கி இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

    வெளி மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும், இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் மீனவர்களை தேடும் பணியை முடுக்கிவிட வேண்டும், பலியான மீனவர் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் குமரி மாவட்டத்தில் தொடர் போராட்டங்களில் குதித்தனர்.

    இவர்களுக்கு ஆதரவாக சென்னையிலும் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமென உறுதி கூறப்பட்டது.

    வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் கடலுக்குள் 250 கடல் மைல் தொலைவுக்கு சென்று தேடும் பணியும் தொடங்கியது.

    இது தவிர வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டது. இதில் 75 சதவீதம் பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

    வெளிமாநிலங்களில் உள்ள தமிழக மற்றும் குமரி மாவட்ட மீனவர்களின் விவரங்களை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சென்றதும், குமரி மற்றும் தமிழக மீனவர்களின் பெயர் பட்டியலை சேகரித்தனர்.

    இதில் முதல் கட்டமாக 2011 மீனவர்களின் பெயர் விவரமும், அவர்கள் சென்ற படகின் முகவரியும் வெளியிடப்பட்டது. அடுத்து மேலும் 1102 மீனவர்கள் மற்றும் அவர்களின் 52 படகுகள் பற்றிய விவரம் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் இப்பணி முடிந்ததும் 2-வது கட்டமாக அந்த பட்டியலும் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த பட்டியல் கன்னியாகுமரி இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குமரி மாவட்டத்தில் இருந்து காணாமல் போனவர்களின் விவரங்களை அதிகாரிகள் கடற்கரை கிராமங்களில் சேகரித்து வந்தனர். இதில் 13 வள்ளங்களில் சென்ற 35 பேர் இதுவரை கரை திரும்பவில்லை என்பது தெரிய வந்தது.

    இதுபோல 66 படகுகளில் சென்ற 547 மீனவர்களும் கரை திரும்பாதது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களையும் சேர்த்தால் மொத்தம் 582 மீனவர்கள் இதுவரை மாயமாகி இருக்கிறார்கள். இவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


    Next Story
    ×