search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
    X

    தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு: கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

    புதுவை லிங்காரெட்டி பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    திருக்கனூர்:

    புதுவை லிங்காரெட்டி பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 3 லட்சம் அரவை திறன் கொண்டு பெரிய சர்க்கரை ஆலைகளில் ஒன்றாக இது திகழ்ந்து வந்தது.

    இங்கு 400 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆரம்பத்தில் இங்கு முழு கொள்ளவுடன் அரவை பணி நடந்தது. ஆனால் விவசாயிகளுக்கு கரும்பு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் கரும்பு வருவது தடைபட்டது.

    எனவே படிப்படியாக அரவை குறைந்து கடந்த ஆண்டு 61 ஆயிரம் டன் மட்டுமே அரைக்கப்பட்டது. மேலும் பல ஆண்டுகளாக சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

    வழக்கமாக நவம்பர் அல்லது டிசம்பரில் அரவைக்கான ஆயத்த பணிகள் நடைபெறும். ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை தொடர்ந்து அரவை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு அரவை பணிக்கான எந்த ஆயத்த பணிகளும் இதுவரை செய்யப்படவில்லை.

    எனவே இந்த ஆண்டு அரவை நடக்குமா? என்ற கேள்விக்குறி இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைக்க புதுவை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களும், அந்த பகுதி விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியாரிடம் ஒப்படைப்பது பற்றி நேற்று தகவல் வந்ததுமே சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    இதுதொடர்பாக அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பு செயலாளர் சிவானந்தம் கூறியதாவது:-

    சர்க்கரை ஆலையை தனியாரிடம் ஒப்படைப்பது பற்றி நாங்கள் பத்திரிகை செய்தியின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டோம். எங்களிடம் ஆலை நிர்வாகமோ, அரசோ எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. தகவலும் தெரிவிக்கவில்லை.

    ஏற்கனவே 9 மாதமாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.11 கோடியை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடமும் ஒப்படைக்கவில்லை. அதேபோல ரூ.7 கோடி இன்சூரன்ஸ் பணத்தையும் அந்த நிறுவனத்திடம் வழங்கவில்லை. ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையும் வழங்கப்படவில்லை.

    ஏற்கனவே சம்பளம் இல்லாமல் நாங்கள் சாப்பாட்டுக்கும், எங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கும் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் தனியாரிடம் ஒப்படைத்தால் எங்களின் நிலைமை என்ன ஆகும். தொழிலாளர்களை கவனத்தில் கொள்ளாமல் எப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்.

    ஆலையை ஒருபோதும் தனியாரிடம் ஒப்படைக்க விடமாட்டோம். நாங்கள் எல்லாம் இந்த ஆலையை நம்பிதான் இருக்கிறோம். எனவே ஆலையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லை என்றால் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆலைக்கு நீண்டகாலமாக மேலாண்மை இயக்குனர் இல்லை. சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமனம் செய்து ஆலையை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அனைத்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:-

    நல்ல முறையில் இயங்கி வந்த இந்த ஆலை நிர்வாக சீர்கேடுகளால் நஷ்டத்தில் தள்ளப்பட்டு விட்டது. ஏற்கனவே விசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.18 கோடி பணத்தை இன்னும் தரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி விவசாயிகளுக்காக கூட்டுறவு சர்க்கரை ஆலை இங்கு அமைக்கப்பட்டது. இதை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இப்போது நினைத்தாலும் கூட ஆலையை சிறப்பாக நடத்த முடியும். மராட்டிய மாநிலத்தில் சர்க்கரை ஆலை கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவராக சரத்பவார் இருக்கிறார்.

    அந்த அமைப்பின் உதவியை பெற்று ஆலையை சிறப்பாக நடத்தலாம். மேலும் அங்கு கைதேர்ந்த நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களை நிர்வாகத்திற்கு கொண்டு வந்து ஆலையை லாபகரமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×