search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.டி.வி. தினகரன் பண்ணை வீட்டில் பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு
    X

    டி.டி.வி. தினகரன் பண்ணை வீட்டில் பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு

    புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி. தினகரன் பண்ணை வீட்டில் பாதாள அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வானூர்:

    புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி. தினகரன் பண்ணை வீட்டில் பாதாள அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி அருகே தமிழக பகுதியான ஆரோவில் பொம்மையார்பாளையத்தில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இங்கு மாட்டுப்பண்ணை, விவசாய தோட்டங்கள் ஆகியவை உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய பங்களாவும் உள்ளது.

    இந்த பண்ணையில் மன்னார்குடியைச்சேர்ந்த 4 தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள்.

    சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் இவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று காலை வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.



    பொம்மையார்பாளையத்தில் உள்ள டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து நேற்று காலை 7 மணி அளவில் அதிகாரிகள் 4 பேர் காரில் வந்தனர். அங்கு வந்து இறங்கியதும் பண்ணை வீட்டில் இருந்தவர்களை வெளியில் செல்ல அனுமதி மறுத்தனர். அதேபோல் வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அங்கு அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள்.

    பகல் 12 மணி அளவில் சென்னையில் இருந்து வருமானவரித் துறை அதிகாரிகள் மேலும் 3 பேர் தினகரனின் பண்ணை வீட்டுக்கு வந்தனர். 7 அதிகாரிகளும் சேர்ந்து சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின்போது பண்ணை வீட்டின் ஒரு பகுதியில் கீழ் தளத்தில் இரண்டு பாதாள அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த பாதாள அறைகளின் கதவுகளில் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ‘எலக்ட்ரானிக்ஸ் லாக்’ பொருத்தப்பட்டு இருந்தது. அதை திறக்க முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள்.

    பாதாள அறை கதவுகளின் பூட்டுகளை ரகசிய குறியீடு எண் (பாஸ்வேர்டு) பயன்படுத்தி மட்டுமே திறக்க முடியும் என்பதால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அந்த பாதாள அறைகளின் கதவுகள் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அந்த அறைகளிலும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அங்கு ஏராளமான ஆவணங்கள் பதுக்கி வைத்து இருந்ததாகவும் அவற்றை வருமானவரி துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. அந்த அறையில் பறிமுதல் செய்யப்பட்டவை என்ன? என்பது பற்றிய விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    அந்த ஆவணங்களை ஆய்வு செய்யவும், பண்ணை வீட்டில் தொடர்ந்து சோதனையை தீவிரப்படுத்தவும் சென்னையில் இருந்து மேலும் 2 வருமானவரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். ஏற்கனவே சோதனையில் ஈடுபட்டு இருந்த 7 அதிகாரிகளுடன் இவர்களும் சேர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இரவு 9.30 மணி அளவில் சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து கார்களில் அதிகாரிகள் வெளியே வந்தனர். காலை 7 மணி முதல் இரவு வரை சுமார் 14½ மணி நேரம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தினகரனுக்கு சொந்தமான இந்த பண்ணை வீட்டில் பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×