search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்
    X

    கடலூரில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடலூரில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் அடைந்தன.
    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளது.

    கடலூரில் நேற்று காலை லேசான தூறல் மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 11 மணிக்கு மேல் திடீரென்று பலத்த மழை கொட்ட தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் பெய்தது. அதன் பின்னர் விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    கடலூர் தேவனாம்பட்டினம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலா (வயது 35). இவர் நேற்று இரவு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் அவரது குடிசை வீடு சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாலா மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    வீட்டில் இருந்த கட்டில், டெலிவி‌ஷன் போன்ற பொருட்கள் சேதமடைந்தன.

    மஞ்சக்குப்பம், குண்டுஉப்பலவாடி, வண்ணாரப்பாளையம், பாரதிநகர் போன்ற பகுதிகளில் 100 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பலரது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.

    வண்ணாரப்பாளையம் பாரதி நகரில் தெருவில் மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் அங்கேயே குளம்போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

    நேற்று இரவு பெய்த மழையில் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் புதுவை செல்லும் சாலையில் சுமார் 3 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று தற்காலிகமாக அந்த பள்ளத்தில் மணல் போட்டு சரி செய்தனர்.

    கடலூரில் தாழங்குடா, தேவனாம்பட்டினத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இன்று 5-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ரூ.20 கோடிக்கு மீன் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    பண்ருட்டி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. சிதம்பரம் உசுப்பூர் இந்திரா நகர் போன்ற பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

    இந்த மழையால் ஆயங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சுகாதார நிலையத்தின் நுழைவு வாயிலில் குளம் போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

    காட்டுமன்னார்கோவிலில் உள்ள கிழக்கு, மேற்கு முள்ளங்குடி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரை வழியாக மழைநீர் கசிந்து வருவதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெல்டா பகுதிகளில் உள்ள ஏரி-குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளன. காட்டு மன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, டி.நெடுஞ்சேரி போன்ற பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு இருந்த ஒருபோக சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    சிதம்பரம்- 50.50

    வானமாதேவி- 41.30

    பண்ருட்டி- 34.50

    விருத்தாசலம்- 49.40

    மே.மாத்தூர்- 22

    கடலூர் - 66.80

    மாவட்டத்தில் சராசரியாக 941.70 மி.மீ. மழை பெய்தது.

    இதேபோல் நேற்று காலை விழுப்புரத்தில் சாரல் மழை பெய்தது. மாலை 6 மணிக்கு திடீரென்று பலத்த மழை கொட்டியது.

    இதனால் விழுப்புரம் நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை மரக்காணம், கீழ்ப்பேட்டை, காளையாங்குப்பம், கூனிமேடு, ஓமிப்பேர், வன்னித்தேர், முன்னூர், எண்டியூர் போன்ற பகுதிகளில் நேற்று இரவு விடிய... விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் ஓமிப்பேர், நகர், கோட்டிக்குப்பம் போன்ற பகுதிகளில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். மரக்காணம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அந்த பகுதியை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் விவசாயிகள் பயிரிட்டிருந்த மணிலாவும் இந்த மழையால் பாதிப்படைந்துள்ளது.

    மரக்காணம் கடற் பகுதியில் இன்று 5-வது நாளாக கடலில் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம் உப்பளம் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் அங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம், வானூர், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம் போன்ற பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.

    கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை விடிய... விடிய வெளுத்து வாங்கியது. இதனால் கள்ளக்குறிச்சி நகர் முழுவதும் வெள்ளக்காடானது. அங்குள்ள பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.

    உளுந்தூர்பேட்டை- 27.2

    கள்ளக்குறிச்சி- 9.4
    Next Story
    ×