search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: சுகாதாரத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: சுகாதாரத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் வருகிற 8-ந்தேதிக்குள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரியில் படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர்.

    இதுகுறித்து பதிவான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில், கல்லூரித் தாளாளர் எஸ்.வாசுகி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து இந்த கல்லூரியை யோகா, இயற்கை படிப்புக்கான கலந்தாய்வில் சேர்க்கப்படவில்லை. இதை எதிர்த்து அந்த கல்லூரியின் தாளாளர் எஸ்.வாசுகி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் எஸ்.வி.எஸ். கல்லூரியை இயற்கை படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால் இந்த உத்தரவின்படி இந்த கல்லூரியை கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. இதையடுத்து அந்த கல்லூரி நிர்வாகம், தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், ‘இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள மனுதாரர் கல்லூரிக்கு அனுமதி வழங்கவில்லை.

    எனவே இந்த கல்லூரிக்கு என்று தனியாக ஒரு சிறப்பு கலந்தாய்வை நடத்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

    இதையடுத்து, நீதிபதிகள், ‘இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆகியோர் வருகிற 8-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

    Next Story
    ×