search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேதின பூங்கா - தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் சுரங்கபாதை பணிகள் முடிந்தது
    X

    மேதின பூங்கா - தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் சுரங்கபாதை பணிகள் முடிந்தது

    சிந்தாதிரிபேட்டை மேதின பூங்கா-தேனாம்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று முடிந்தது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது.

    கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- நேரு பூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது.

    பயணிகள், பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    சிந்தாதிரிபேட்டையில் உள்ள மேதின பூங்காவில் இருந்து அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.வரை மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    2 வழித்தடங்கள் கொண்ட சுரங்கப்பாதையாக இது அமைக்கப்படுகிறது. தற்போது இதில் முதல் வழித்தட பாதை சுரங்கப்பணிகள் 100 சதவீதம் நிறைவு அடைந்துள்ளது. சுமார் 4 கி.மீட்டர் தூரம் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது வழித்தட பாதையில் 85 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

    இந்த வழித்தட பாதையில் மேதின பூங்கா, எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். ஆகிய 4 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழித்தடப்பாதையில் கடினமான பெரிய பாறைகள் இருந்ததால் சுரங்கம் தோண்டும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன.

    ரஷியாவை சேர்ந்த மாஸ் மெட்ரோ நிறுவனம் ஒப்பந்த பணியில் இருந்து பின் வாங்கியதை தொடர்ந்து இந்த பணி மேலும் தாமதமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் புதிய ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். சுரங்க நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணிக்கு ராட்சத சுரங்க எந்திரம் துளையிட்டு வெற்றிகரமாக வெளியே வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

    தேனாம்பேட்டையில் இன்று ராட்சத டனல் எந்திரம் வெற்றிகரமாக துளையிட்டு வெளியே வருவதை அங்கு கூடியிருந்த மெட்ரோ ஊழியர்கள், அதிகாரிகள் உற்சாகமாக கரகோ‌ஷம் எழுப்பி வரவேற்றனர்.

    மேதின பூங்கா- சின்னமலைக்கு ஒருவழித்தட பாதையில் அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×