search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆயிரம் விளக்கில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
    X

    ஆயிரம் விளக்கில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி

    ஆயிரம் விளக்கு பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான். இதனையடுத்து மாணவன் படித்த பள்ளி மற்றும் அவன் குடியிருக்கும் பகுதியிலும் சுகாதார தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதித்துள்ளனர்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மற்றும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களிலும் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பொது சுகாதாரத்துறை மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் டெங்கு பாதிப்பு குறையவில்லை.

    சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி.பள்ளியில் படித்த 7 வயது மாணவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 3 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று அதன்பிறகு உயிர் இழந்துள்ளான்.

    அந்த மாணவன் பெயர் பார்கவ் (வயது 7). தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். ஒரு வாரத்திற்கு மேலாக அவனுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது.

    அவனை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சிறுவன் பார்கவ்வை மாற்றம் செய்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனது உடலில் நாளுக்கு நாள் படிப்படியாக தட்டணுக்கள் குறைந்தது. இதனால் டாக்டர்கள் தீவிரமாக போராடியும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. நேற்று காலை பார்கவ் பரிதாபமாக உயிர் இழந்தான்.

    டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 3 தனியார் பிரபலமான மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்று பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் செந்தில் நாதனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    சிறுவன் பார்கவ் ஒரு வாரமாக 3 தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். அவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அந்த மருத்துவமனைகளிடம் இருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அரசு டாக்டர்கள் 3 மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை விவரங்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்கள்.

    மாணவன் படித்த பள்ளி மற்றும் அவன் குடியிருக்கும் ஆயிரம் விளக்கு பகுதியிலும் சுகாதார தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இப்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு, சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×