search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல் பற்றி பிரபலங்களுக்கு தெரியாது: சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்
    X

    டெங்கு காய்ச்சல் பற்றி பிரபலங்களுக்கு தெரியாது: சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்

    டெங்கு காய்ச்சல் பற்றி பிரபலங்களுக்கு தெரியாது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்துக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் அவ்வபோது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். தற்போது டெங்கு காய்ச்சல் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதியவிட்டுள்ளார்.

    அதில் செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு காய்ச்சல் சங்கு வீண். கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவண செய்யா அரசு அகல வேண்டும் என்றும், ‘‘அரசு தூங்குகிறது பெற்றோர் விழித்திருங்கள்...இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்’’ என்று கமல் தெரிவித்துள்ளார்.



    இது குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு நடிகர் விமர்சனத்திற்கெல்லாம் பதில் கூற முடியுமா? என்று டெங்கு நோய் குறித்து பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் பாதிப்பு 120 நாடுகளில் உள்ளது. கேரளாவில் 20 ஆயியிரம் பேரும், கர்நாடகா மாநிலத்தில் ஆயிரத்திற்கும் மேலானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் என்பது ஒரு துறை பிரச்சினை என்று பொதுமக்கள் நினைத்தால் அது தனக்குத்தானே ஏமாற்றி கொள்வதற்கு சமம். டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்கள் சாக்கடை, கழிவு நீரில் இருந்து உற்பத்தியாவது இல்லை. நல்ல தண்ணீரில் இருந்து தான் உற்பத்தியாகிறது.

    குடிநீர் தொட்டி, குடம், பாத்திரங்களில் பிடித்து வைப்பதில் இருந்தும், டயர், தேங்காய் மட்டை, போன்றவற்றில் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்தும் உருவாகிறது. வீட்டை சுற்றியுள்ள 500 மீட்டர் தூரத்தில் இருந்தாலும் இதனால் பாதிப்பு ஏற்படும்.

    சென்னையில் ஒரு லட்சம் சின்டெக்ஸ் டேங்குகளிலும், பள்ளி, கல்லூரிகளில் குடிநீர் தொட்டிகளிலும், உள்ளன. இவற்றில் இருந்து டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வும் நடைபெற்று வருகின்றன. இதுபற்றி பிரபலங்கள் தெரியாமல் இருக்கிறார்கள்.

    இது வாழ்வாதார பிரச்சினையாகும். டெங்கு கொசுக்கள் பெருகுவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். டெங்கு காய்ச்சல் எப்படி, எதனால் வருகிறது. அதற்கான காரணம் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    அப்போது தான் டெங்கு கொசுக்களை நிரந்தரமாக கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும். நோய் வருவதை தடுக்க முடியும்.

    டெங்குவினால் பாதிக்கப்படுபவர்கள் 2,3 தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று விட்டு தாமதமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இதனால் தட்டணுக்கள் குறைந்து ரத்த கசிவு ஏற்படுகிறது.

    டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 99 சதவீதம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர். ஒரு சதவீதம் மட்டுமே தட்டணுக்கள் குறைந்து அதிர்ச்சியில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    அரசு எல்லா மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் தான் உயிர் இழப்பு மிகக்குறைந்த அளவில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×