search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனயம் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து 48 கடற்கரை கிராமங்களில் மனித சங்கிலி போராட்டம்
    X

    இனயம் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து 48 கடற்கரை கிராமங்களில் மனித சங்கிலி போராட்டம்

    இனயம் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள 48 கடற்கரை கிராமங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கொல்லங்கோடு:

    குமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு ஆயத்த பணிகள் தொடங்கின. இங்கு துறைமுகம் வந்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம், வீடுகளில் கருப்புகொடி கட்டுதல், கடை அடைப்பு என பலக்கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    மீனவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில், இனயம் துறைமுகத்தை எதிர்த்து நெய்தல் வளர்ச்சி மையம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, நேற்று காலை நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் ஏராளமான மீனவர்கள் கூடினர். தொடர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     இந்த போராட்டம் நீரோடியில் இருந்து தொடங்கி மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, முள்ளூர்துறை, இனயம், குளச்சல், குறும்பனை, முட்டம், கீழமணக்குடி வழியாக ஆரோக்கியபுரம் வரையுள்ள 48 கடற்கரை கிராமங்களில் நடந்தது.

    போராட்டத்தில், சின்னத்துறை பகுதியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வும், குளச்சலில் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றனர்.

    மேலும், கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பங்குத்தந்தையர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழமணக்குடியில் திருச்சிலுவை ஆலய பங்குத்தந்தை (பொறுப்பு) ராஜநாயகம் தலைமை தாங்கினார். ஆலய நிர்வாககுழு செயலாளர் சகாயராணி, பொருளாளர் ஜாண்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×