search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானசேவை தொடங்கப்படும்: அமைச்சர் தகவல்
    X

    புதுவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானசேவை தொடங்கப்படும்: அமைச்சர் தகவல்

    ஓடுதள விரிவாக்கத்துக்கு பிறகு புதுவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானசேவை தொடங்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதன்முறையாக பெங்களூருக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. 48 இருக்கைகள் கொண்ட விமானம் இயக்கப்பட்ட நிலையில் போதிய வருவாய் இல்லாததாலும், வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் மாநில அரசின் நிதி வழங்கப்படாததாலும் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    மீண்டும் 2014-ல் பெங்களூருவுக்கு தொடங்கப்பட்ட அலையன்ஸ் ஏர் விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முன்முயற்சி மேற்கொண்டது.

    இந்நிலையில் மத்திய அரசு 500 கி.மீட்டர் தூரமுள்ள நகரங்களுக்கு ரூ. 2500 கட்டணத்தில் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி புதுவையில் இருந்து ஐதராபாத், பெங்களூர், கோவை, திருப்பதி, திருச்சி போன்ற நகரங்களுக்கு விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக ஐதராபாத், விஜயவாடாவுக்கு விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

    வருகிற 16-ந்தேதி முதன்முறையாக ஐதராபாத்துககு விமான சேவை தொடங்குகிறது. இதையொட்டி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் மனோஜ்பரிதா, சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி ஆகியோர் விமான நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ். கூறியதாவது:-

    புதுவையில் இருந்து தினமும் காலை 11.40 மணிக்கு ஐதராபாத்துக்கு ஸ்பெஸ்ஜெட் விமானம் புறப்பட்டு செல்லும். இதற்கான பயண நேரம் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும். பயணக்கட்டணம் ரூ.2.444 ஆகும். ஐதராபாத்துக்கான விமான சேவையை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைக்கிறார். ஐதராபாத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வரவேற்பு தரப்படும்.

    விமான நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்படும். பி.டி.டி.சி. சார்பில் பிரிபெய்ட் கார் வசதி, பி.ஆர்.டி.சி. சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்படும். மேலும் விமான நிலையத்தில் உணவக வசதியும் செய்யப்பட உள்ளது. சுற்றுலா, பொதுப்பணித்துறை, சுகாதாரம் மற்றும் காவல்துறை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 50 சதவீத கட்டணத்துக்கான மானியத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

    புதுவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக பகுதிகளில் இருந்து 85 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். புதுவை அரசுக்கு நிதிச்சிக்கல் உள்ளதால், நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை மத்திய விமான போக்குவரத்துதுறை ஏற்க வலியுறுத்தி உள்ளோம்.

    மேலும் இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்களை நேரில் சந்தித்துபேச உள்ளேன். புதுவையை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து சென்று இதற்காக உதவி பெறப்படும். நிலம் கிடைத்ததும் ஓடுதள விரிவாக்கம் செய்யப்படும். அதன்பிறகு புதுவையில் இருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு விமானசேவை தொடங்கப்படும்.

    இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

    Next Story
    ×