search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோவில்லில் காணிக்கை உண்டியலில் ரூ.10 லட்சம் கொள்ளை
    X

    ஆரோவில்லில் காணிக்கை உண்டியலில் ரூ.10 லட்சம் கொள்ளை

    ஆரோவில்லில் தியான கூடத்தில் இருந்த காணிக்கை உண்டியலில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் சர்வதேச நகரமாகும். இங்கு தினமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.

    இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அங்குள்ள மாத்திர் மந்திரில் (தியான கூடம்) தியானம் செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தாங்கள் அணிந்துள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், விலை மதிக்கத்தக்க அணிகலன்கள், தங்கள் நாட்டு ரூபாய் நோட்டுகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    காணிக்கை செலுத்தும் முன் அந்த பொருட்கள் பதிவு செய்யப்படும். பின்னர் ஒவ்வொரு ஆண்டு முடிவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கணக்கெடுப்பு செய்து அவை ஆரோவில் சீரமைப்பு பணிக்காக செலவிடப்படும்.

    இந்த நிலையில் ஆரோவில் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொன்விழா கொண்டாடப்படுகிறது. பொன்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதற்காக தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம்-நகைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

    அப்போது பதிவு செய்யப்பட்ட தங்கம்-வெள்ளி நகைகள், வெளி நாட்டு கரன்சி நோட்டுகள் உள்ளிட்ட 36 வகை பொருட்கள் மாயமாகி இருந்தன. இதன் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். இதனை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து காணிக்கை பொருட்களை பதிவு செய்யும் உண்டியல் பொறுப்பாளரான கனடா நாட்டை சேர்ந்த ஜான் கென்னடி ஆரோவில் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    காணிக்கை உண்டியலுக்கு 2 சாவிகள் உள்ளன. ஒரு சாவி உண்டியல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஜான் கென்னடியிடமும், மற்றொரு சாவி ஆரோவில் செயல்பாட்டு குழுவினரிடமும் உள்ளது.

    எனவே, இதில் வெளி நபர்கள் யாரும் ஈடுபட்டு இருக்க வாய்ப்பில்லை என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் ஆரோவில்லில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×