search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளறுபடிகளை களையவும் வழிகாட்ட வேண்டும் - தலையங்கம்
    X

    குளறுபடிகளை களையவும் வழிகாட்ட வேண்டும் - தலையங்கம்

    நில மதிப்பு, பத்திரப்பதிவு வி‌ஷயத்தில் நிலவும் பிரச்சனைகளை களைய வேண்டியது அவசியம். அப்படி களைந்தால் மட்டுமே அரசின் பலன் மக்களுக்கும், மக்கள் செலுத்தும் வரி அரசுக்கும் முழுமையாக கிடைக்கும்.
    சென்னை:

    நிலமோ, வீடோ வாங்குவது எளிது. ஆனால் பத்திரப்பதிவு செய்வதுதான் கஷ்டம். பெருந்தொகையை கட்டணமாக பத்திரப்பதிவுக்கு கொடுக்க வேண்டிய சூழல் இருந்தது.

    இதற்கு காரணம் நிலங்களின் அரசு வழிகாட்டி மதிப்புதான். கடந்த 2012-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பும் பத்திரப்பதிவு கட்டணமும் வெகுவாக உயர்த்தப்பட்டது. இதனால் ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்தது என்பது மேலோட்டமாக தெரிந்தாலும் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் என்பதுதான் உண்மை.

    நகரங்களை பொறுத்தவரை வழிகாட்டி மதிப்பு, சந்தை மதிப்பு ஆகியவை எப்படி இருந்தாலும் நகரங்கள் வளர வளர இப்படித்தான் இருக்கும் என்று ஓரளவு தாங்கி கொள்கிறார்கள்.

    ஆனால் கிராமங்களில் ஏராளமான நிலங்கள் எந்த பயன்பாடும் இல்லாமல் இருக்கின்றன. அதற்கான வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்ததால் நிலத்தின் மதிப்புக்கு இணையாக பத்திரப்பதிவுக்கு செலவிட வேண்டிய கட்டாயம் இருந்தது.

    இப்போது நிலங்களின் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் சொத்துக்கள் வாங்குவதும், விற்பதும் எளிமையாகும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் ஏற்கனவே தீர்க்கப்படாமல் இருக்கும் குளறுபடிகளால் அரசின் இந்த உத்தரவால் மக்களுக்கு பலன் கிடைக்குமா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    நிலங்களை பலவகைகளாக பிரித்துள்ளார்கள். குடியிருப்பு பகுதிகள் மட்டுமே 4 வகையாக பிரிக்கப்படுகிறது. குடியிருப்பு வசதிகள், சந்தைவிலை, வசதிகள் அடிப்படையில் சார்-பதிவாளர்களே மதிப்பை நிர்ணயிக்கிறார்கள்.

    விவகாரமே இங்குதான் தொடங்குகிறது. ரியல் எஸ்டேட் அதிபர்கள், அரசியல்வாதிகள், செல்வாக்கு மிக்கவர்கள் அதிகாரிகளை வளைத்து விடுகிறார்கள். இதனால் அதிக மதிப்பு நிர்ணயிக்க வேண்டிய இடங்களுக்கு குறைந்த மதிப்பும், குறைந்த மதிப்பு நிர்ணயிக்க வேண்டிய இடங்களுக்கு அதிக மதிப்பும் நிர்ணயிப்பதாகவும் இதில் பெருந்தொகை கைமாறுவதாகவும் பரவலாகவே புகார் கூறப்படுகிறது.

    சில பதிவாளர் அலுவலகங்களின் பதவியை பிடிக்கவே கடும் போட்டி ஏற்படுவதும் உண்டு. எனவே முதலில் இந்த குளறுபடிகள் களையப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள நிலங்களுக்கு அரசே வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அதை கூட்டும் அல்லது குறைக்கும் அதிகாரத்தை தனிநபர்களுக்கு வழங்க கூடாது.

    நகரப் பகுதிகளில் 500 அல்லது 600 சதுரஅடி இடம் வாங்கி வீடு கட்டுபவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைய வாய்ப்பு உண்டு.

    அரசு 33 சதவீதம் வழிகாட்டி மதிப்பு குறைப்பு என்று அறிவித்து இருப்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது.

    வியாபாரிகள் விற்பனையை பெருக்கவும், அதே நேரத்தில் தங்கள் வருமானத்தில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் வாடிக்கையாளர்களை கவர தள்ளுபடி, இலவசம் என்று பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பார்கள்.

    அதே போல்தான் இந்த வி‌ஷயத்தில் அரசும் கவனமாக இருக்கிறது. பதிவுத்துறை என்பது பொன் முட்டையிடும் வாத்தை போன்றது. எனவே அங்கிருந்து கிடைக்கும் வருவாய் எந்த வகையிலும் குறைந்துவிட கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது தெரிகிறது.

    முன்பு பத்திரபதிவுக்கு 7 சதவீதத்துக்கு முத்திரை தாளும், ஒரு சதவீதம் ஆவணப்பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

    இனி ஆவண பதிவு கட்டணம் 4 சதவீதம் கட்ட வேண்டும். ஆக மொத்தம் 11 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே எதிர்பார்த்த அளவில் மிகப்பெரிய பலன் கிடைக்காது என்ற கருத்தும் உள்ளது.

    பொதுவாகவே எந்த திட்டம் அமலுக்கு வரும் போது சிறு சிறு பிரச்சனைகள் இருப்பது வழக்கம்தான். அவற்றை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டியது அரசின் கடமை. அதே போல் நில மதிப்பு, பத்திரப்பதிவு வி‌ஷயத்திலும் நிலவும் பிரச்சனைகளை களைய வேண்டியது அவசியம். அப்படி களைந்தால் மட்டுமே அரசின் பலன் மக்களுக்கும், மக்கள் செலுத்தும் வரி அரசுக்கும் முழுமையாக கிடைக்கும்.
    Next Story
    ×