search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது எப்படி?
    X

    சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது எப்படி?

    உங்களிடம் உள்ள குறைகள், தவறான செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை படிப்படியாக அகற்றி சுய கட்டுப்பாட்டுடன், சுய ஒழுக்கத்துடன் வாழ முடியும்.
    அமெரிக்காவைச்சேர்ந்த புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர், பேச்சாளர், தொழில் முனைவோர் ஸ்டீவ் பாவ்லினா. இவரது தன்னம்பிக்கை கட்டுரைகள் இளைய தலைமுறையினரை ஊக்குவிப்பதாக உள்ளது. இவர் சுய கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் குறித்து எழுதியுள்ள கட்டுரையின் முக்கிய அம்சங்களை காண்போம்.

    எந்த சூழ்நிலையில் இருந்தாலும், எந்த மனநிலையில் இருந்தாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் தன்மையே சுய கட்டுப்பாடு அல்லது சுய ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொருவரின் உடல் தகுதியும், திறனும் வித்தியாசமாக இருக்கும். சிலர் பலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் உடல் பலம் குறைந்தவர்களாக இருக்கலாம். சிலர் எந்த சூழ்நிலையிலும் தன்னிலையை இழக்காமல் சுய கட்டுப்பாட்டுடன் செயல்படுவார்கள். சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிக்கிக்கொண்டு உணர்ச்சி வசப்பட்டு செயல்படுவதுண்டு. சிலர் சில நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி இருக்கும் திறன் பெற்றிருப்பார்கள். சிலரால் குறிப்பிட்ட வினாடிகள் வரை தான் மூச்சை அடக்கிக்கொண்டிருக்க முடியும்.

    சுய கட்டுப்பாட்டை ஒருவர் வளர்த்துக்கொள்வது எப்படி?

    உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக ஒருவர் வைத்துக்கொள்ள, அதாவது ‘சிக்ஸ் பேக்’ உடல் அமைப்பை உருவாக்க நினைத்தால் அதை ஒரே நாளில் கொண்டுவர முடியாது. தினமும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். எடைகள் தூக்கி உடல் தசைகளை மெருகேற்ற வேண்டும். படிப்படியாக எடையின் அளவை அதிகரித்து தசைகளை முறுக்கேற்ற வேண்டும்.



    போதிய அளவு சத்துணவு சாப்பிட வேண்டும். இத்தனை வழிமுறைகளை பின்பற்றினால் தான் ‘சிக்ஸ் பேக்’ உடல் அமைப்பை பெற முடியும். இதையெல்லாம் மீறி ஒரே நாளில் அதிக எடையை தூக்கி, நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முயன்றால் உடல் பாதிக்கப்படும், காயங்கள் ஏற்படும் ஆபத்தும் உருவாகும். அதுபோல சுயகட்டுப்பாடு அல்லது சுய ஒழுக்கம் என்ற பண்பை பெற சில அடிப்படை பயிற்சிகளை தினமும் செய்யவேண்டும்.

    வாழ்க்கையில் நிகழ்வுகளை ஒரே நாளில், ஒரே நொடியில் மாற்றி அமைக்க முடியாது. சில பழக்கவழக்கங்கள் மனதிலும், உடலிலும், செயலிலும் வேரூன்றி இருக்கலாம். அதை ஒரே நொடியில் மாற்ற முடியாது. எனவே உங்கள் சொல்லிலும், செயலிலும் மாற்றம் வர உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும்.

    உடற்பயிற்சி செய்பவர் முதல் நாளிலேயே 100 கிலோ எடையை தூக்க முடியாது. முதலில் 10 கிலோ என்று தொடங்கி எடைதூக்கும் பயிற்சி செய்து படிப்படியாக எடையை அதிகரித்து சில மாதங்கள் கழித்துதான் 100 கிலோ எடையை தூக்க முடியும். அப்போது தான் அந்த எடையை தூக்கும் அளவுக்கு உடல் வலுவுள்ளதாக இருக்கும்.

    அதுபோல, முதலில் உங்களிடம் உள்ள தவிர்க்க வேண்டிய பழக்க வழக்கங்கள், மாற்ற வேண்டிய குணாதிசயங்கள் போன்றவற்றை பட்டியலிடுங்கள். உதாரணமாக அதிகாலையில் எழும் பழக்கம் உங்களிடம் இல்லை என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை முதலில் ஆராய வேண்டும். இரவு நெடு நேரம் விழித்திருந்து டெலிவிஷன் பார்ப்பது, செல்போனில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, சமூக வலை தளங்களில் நேரத்தை செலவிடுவது, சினிமா பார்ப்பது... என்று பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதை அறிந்து படிப்படியாக அதை உங்களிடம் இருந்து அகற்ற வேண்டும். இரவு சரியான நேரத்தில் உறங்கச்சென்றால் தான் அதிகாலை எழுந்திருக்க முடியும். எனவே அதற்கு ஏற்ப உங்கள் பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்ய வேண்டும்.

    இந்த பாணியைப் பின்பற்றி உங்களிடம் உள்ள குறைகள், தவறான செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை படிப்படியாக அகற்றி சுய கட்டுப்பாட்டுடன், சுய ஒழுக்கத்துடன் வாழ முடியும்.
    Next Story
    ×