search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஜாக்கிங் பயிற்சி இதயநோய் வருவதை தடுக்கும்
    X

    ஜாக்கிங் பயிற்சி இதயநோய் வருவதை தடுக்கும்

    ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும்.
    இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதயம் சீராக செயல்பட தமனிகள் மூலமாக ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான ரத்தம் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுப்பெற்று இதயம் நன்றாக செயல்பட முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க வயது, உடல் அமைப்புக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.

    * தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துவிடலாம். தமனிகள் முழுமையாக அடைப்பட்டு இதயத் தசைகள் சுருங்கி இதயம் இயங்க போதுமான ஆற்றல் கிடைக்காமல் போவதுதான் மாரடைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாகும்.

    * உடற்பயிற்சி செய்யும்போது அதிக அழுத்தத்துடன், ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும். அப்படி அதிக அழுத்தத்துடன் செல்லும் ரத்தம் தமனியில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற துணைபுரியும். அன்றாட உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்களையும், மாரடைப்பையும் ஓரளவு தடுக்க முடியும்.

    * உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, பல்வேறு ரத்தக் குழாய்களையும் விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தடைபடாமல் தங்கு தடையின்றி செல்லவும் துணைபுரிகின்றன.

    * நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி போன்றவை இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகள். வயது, உடல் அமைப்பு, உடல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந் தெடுக்கலாம்.



    * வயதானவர்கள் அன்றாடம் நடைப் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது எளிமையான பயிற்சி என்பதோடு இதய தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.

    * நடைப்பயிற்சிக்காகவே காலையிலோ, மாலையிலோ குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியே ஆக வேன்டும். உடலின் ஆற்றலுக்கு ஏற்ப நடக்கும் தூரத்தை படிப்படியாக அதிகரித்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 3 ஆயிரம் காலடிகளாவது நடக்க வேண்டும். தினமும் 10 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது.

    * நடைப்பயிற்சிக்கு போதிய நேரம் ஒதுக்க முடியாதவர்கள் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ செல்ல விரும்பாமல், நடந்தே சென்றுவர பழக வேண்டும்.

    * வேலை பார்க்கும் இடம் மூன்றாவது, நான்காவது மாடியில் இருந்தால் லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறி செல்லலாம்.

    * பணி முடிந்து பஸ்சில் வீடு திரும்புபவர்கள் ஒன்று அல்லது இரண்டு நிறுத்தங்களுக்கு முன்பாகவே இறங்கி நடந்து வீட்டுக்கு செல்லலாம்.



    * அலுவலக பணியில் இருப்பவர்கள் மதிய உணவு, காபி சாப்பிடுவதற்கு செலவிடும் நேரத்தை நடைப்பயிற்சிக்கு ஒதுக்கலாம்.

    * காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் கால்களுக்கு பொருத்தமான ஷூ, சாக்ஸ்களை அணிய வேண்டும். உடன் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து செல்ல வேண்டும்.

    * ஜாக்கிங் செல்வதும் மாரடைப்பை தடுக்க உதவும். உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு ஜாக்கிங் செல்லும்போது வழக்கத்தைவிட அதிகமாகும். ரத்த குழாய்களையும், அதனை சூழ்ந்துள்ள தசை களையும் வலுவாக்கும். வயதானவர்கள் ஜாக்கிங் செல்வதாக இருந்தால் இதய துடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு மற்றும் உடல் தகுதியை கருத்தில் கொண்டு டாக்டரிடம் கலந்து பேசி முடிவுவெடுக்க வேண்டும்.

    * சைக்கிள் ஓட்டும் பயிற்சி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற எளிமையான உடற்பயிற்சி. அன்றாடம் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தால் இதயத் தசைகள் வலுப்படும். இதய தசைகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் அதிகமாகும். இதயத்துக்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய், முதுகு தண்டுவட பாதிப்பு, மூட்டுச்சிதைவு, குடல் இறக்கம், உடல்பருமன் போன்ற நோய்களை கட்டுப் படுத்தவும் சைக்கிள் பயிற்சி கைகொடுக்கும்.

    * இதய தசைகள் நன்கு வலுப்பெற நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயிலலாம்.
    Next Story
    ×