search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் கவலையை அறிந்து கொள்வது எப்படி?
    X

    குழந்தைகளின் கவலையை அறிந்து கொள்வது எப்படி?

    குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலமாகவே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்துவிட முடியும். அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.
    மன அழுத்தம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. ஆனால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாவதை பெரும்பாலான பெற்றோர்கள் கவனத்தில் கொள்வதில்லை. ‘ஏதோ கோபத்தில் இருக்கிறான்’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

    குழந்தைகளின் மன நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் அது தேவையில்லாத பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு குழந்தைகளிடமும் மன அழுத்த பாதிப்புக்குரிய அறிகுறிகள் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சில குழந்தைகள் எப்போதும் கவலை தோய்ந்த முகத்தோடு காட்சியளிப்பார்கள். சிலர் யாரிடமும் பேசாமல் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருப்பார்கள். சில குழந்தைகளின் பேச்சில் ஆதங்கமும், கோபமும் வெளிப்படும். குழந்தைகள் மன அழுத்த பாதிப்புக்குள்ளாவதற்கு வீட்டுச்சூழலே பெரும்பாலும் காரணமாக அமைந்துவிடுகிறது.

    சில பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போடுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். குழந்தைகள் முன்னால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது அது அவர்களை வெகுவாக பாதிக்கும். ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளை விட்டு பிரிந்திருப்பார்கள். அப்போது இருவரின் அன்பும் கிடைக்காமல் ஏங்குவதோடு, தாம் அவர்களுக்கு பாரமாக இருப்பதாக கருதி குழந்தைகள் தங்களையே வருத்திக்கொள்வார்கள்.

    குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்பங்களும் குழந்தைகளின் நிம்மதியை கெடுத்துவிடும். பெற்றோர்கள் மன அழுத்த பாதிப்புக்குள்ளாகும்போது அது குழந்தைகளையும் பாதிக்கும். மிக நெருக்கமானவர்களின் பிரிவு, உறவினர்களுடன் பெற்றோருக்கு ஏற்படும் மனஸ்தாபம், செல்ல பிராணிகளின் இறப்பு, தாங்க முடியாத இழப்பு, அடிக்கடி ஏற்படும் உடல் நலக்குறைபாடு போன்றவையும் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும்.



    குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் மன வருத்தங்களை போக்குவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடாமல் ஆறுதலாக பேசி அவர்களின் மன வருத்தங்களை கேட்டு தெரிந்துகொள்ள வேன்டும்.

    இல்லாவிட்டால் குழந்தைகளிடம் நெருங்கி பழகும் உறவினர்கள், குழந்தைகளின் நட்பு வட்டாரங்கள் மூலமாக அவர்களின் மனக்குறைகளை அறிய வேன்டும். அதைவிட குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்திக்கொள்வது பிரச்சினையின் வீரியத்தை குறைக்க வழிகோலும். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலமாகவே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்துவிட முடியும். அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.

    அவர்கள் மன வேதனையில் பேசிக்கொண்டு இருக்கும்போது குறுக்கிட்டு பேசுவதோ, வேறு எங்காவது கவனத்தை செலுத்திக்கொண்டு கேட்பதோ கூடாது. அவர்கள் மீது குறை சொல்லவும் கூடாது. ‘நீ ஏதாவது தவறு செய்திருப்பாய். உன் நடவடிக்கையே சரியில்லை’ என்று அவர்கள் மனம் நோகும்படி வார்த்தைகளை கொட்டக்கூடாது. அவர்கள் பேசி முடிக்கும் வரை அமைதி காக்க வேண்டும். அவர்கள் பேசுவதை கொண்டே எப்படியெல்லாம் சின்ன விஷயங்களை கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப பக்குவமாக பேசி புரிய வைக்க வேண்டும்.



    ‘நானும் உன்னை கவனித்துக்கொண்டுதான் வருகிறேன். கொஞ்ச நாளாகவே நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய். எதுவாக இருந்தாலும் என்னிடம் தயங்காமல் சொல்’ என்று அனுசரணையாக பேச வேண்டும். பெற்றோர்கள் தனது நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் தோன்ற வேண்டும். அதுவே அவர்களை ஆட்கொண்டிருக்கும் மன அழுத்த பாதிப்பிலிருந்து விடுபட வழிவகுக்கும்.

    எத்தகைய உணர்வுகள், சம்பவங்கள் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எத்தகைய நிகழ்வுகள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதை கற்றுக்கொடுங்கள். மன அழுத்தம் ஏற்பட்டால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதையும் சொல்லிக்கொடுங்கள்.

    தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு என்பதை குழந்தைகளுக்கு புரியும்படி எடுத்துரையுங்கள். அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளை தெரியப்படுத்துங்கள். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செயல் களை செய்வதற்கு அனுமதியுங்கள். அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும்போது ஊக்கப்படுத்துக்கள். தவறு செய்தால் கனிவோடு சுட்டிக்காட்டுங்கள். எந்தவொரு செயலையும் அவர்கள் செய்து முடித்தபிறகு தவறாமல் பாராட்டுங்கள். அது அவர்களை உற்சாகப்படுத்தும். அவர்களின் திறமைகளை மெருகேற்றும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவைக்கும்.
    Next Story
    ×