search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து 7.05 மணிக்கு அம்மன் கேடயத்தில் கொடி மரத்தின் முன்பாக எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் 7.17 மணிக்கு துணியில் வரையப்பட்ட அம்மன் படம் கொடிமரத்தின் மேல் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் குமரதுரை மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் மரக்கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு அம்மன் கோவிலிலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி வீதியுலா வருகிறார். மாலை 5 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு பல்லக்கில் வலம் வருகிறார். 4-ம் திருநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் ஒவ்வொரு நாள் மாலையிலும் அம்மன் மர அன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மர யானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.

    இதைத்தொடர்ந்து 9-ம் திருநாளான 30-ந் தேதி மாலை 5 மணிக்கு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். இரவு 11 மணிக்கு திருவீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார். 31-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் கோவிலிலிருந்து அம்மன் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி வழிநடை உபயம் கண்டு நொச்சியம் வழியாக திருக்காவேரிக்கு சென்றடைகிறார். திருக்காவேரியில் மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதலும், தொடர்ந்து இரவு 8.45 மணி முதல் 11.45 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடமிருந்து சீர்பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பின்னர் பிப்ரவரி 1-ந் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதைத்தொடர்ந்து திருக்காவேரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடாகி நொச்சியம், மண்ணச்சநல்லூர், வெங்கங்குடி வழியாக வழிநடை உபயம் கண்டருளி இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று கொடி மரத்திற்கு முன் அம்மன் புறப்பாடாகிறார். தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு, 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேஷ் உத்தமநம்பி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×