search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருஉத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    திருஉத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருஉத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் மீது புதிய சந்தனம் பூசப்பட்டது

    திருஉத்தரகோசமங்கை கோவிலில் அபூர்வமான மரகத நடராஜர் திருமேனி மீது ஆருத்ரா தரிசனத்தையொட்டி புதிய சந்தனம் பூசப்பட்டது.
    ராமநாதபுரத்தை அடுத்துள்ள புகழ்வாய்ந்த திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனம் களையும் அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் சந்தனம் கலையப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகளுக்கு பின்னர் பச்சை மரகத நடராஜர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அருள்பாலித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணி அளவில் அருணோதய காலத்தில் அபூர்வ பச்சை மரகத நடராஜர் திருமேனி மீது புதிய சுத்தமான சந்தனம் பூசப்பட்டது. பச்சை மரகத நடராஜர் சிலை முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நன்கு அரைக்கப்பட்ட சந்தனம் மென்மையாக பூசி வைக்கப்பட்டது.

    இதன்பின்னர் மரகத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மரகத நடராஜருக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நடராஜரை தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கூத்தர் பெருமாள் திருவீதி உலாவும், மாலை 4 மணியளவில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. சிவனுக்கு உகந்தநாளாக கருதப்படும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை தரிசிப்பது விசேஷம் என்பதாலும், புத்தாண்டு பிறந்துள்ளதாலும் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×