search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோவிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
    X

    சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோவிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

    டிசம்பர் 19-ந்தேதி நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவிலில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் சனிபகவான், தனியாக சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருநள்ளாறு வருகை தந்து இங்குள்ள நளதீர்த்தத்தில் புனிதநீராடி கோவிலுக்கு சென்று சனீஸ்வரபகவானை தரிசனம் செய்து திலதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோ‌ஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது இங்கு ‘சனிப் பெயர்ச்சி விழா’வாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 19-ந்தேதி காலை 10 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

    அன்றைய தினம் பகவானை தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 லட்சம் பக்தர்கள் வருகை தருவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    சுரக்குடி ரோடு மற்றும் கீழாவூர் அருகில் உள்ள வடக்கு உள்வட்டச் சாலை ஆகிய பகுதிகளில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

    காரைக்கால் வழியாக வரும் பஸ்கள் வடக்கு உள்வட்டச்சாலை தற்காலிக பஸ்நிலையத்திலும், திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு வழியாக வரும் பஸ்கள் சுரக்குடிரோடு தற்காலிக பஸ்நிலையத்திலும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு உள் வட்ட சாலையில் நளதீர்த்தம் செல்லும் சாலை சந்திப்பு மற்றும் சுப்புராயபுரம் ரோடு சந்திப்பு ஆகிய 2 இடங்களில் தேவஸ்தானம் மூலம் நிரந்தர கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், வாகன நிறுத்துமிடங்கள், உள்வட்டச் சாலை, தற்காலிக பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடமாடும் கழிவறைகளும் அமைக்கப்பட உள்ளது. கோவில் உள்பகுதி, வெளிப்பகுதி, நளதீர்த்தம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேவஸ்தானம் சார்பில் 124 கண்காணிப்பு கேமராக்கள் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் கூடுதலாக 60 இடங்களில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    நளதீர்த்தத்தில் பக்தர்கள் தூய்மையான நீரில் புனிதநீராடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குளத்தின் நடுப்பகுதியில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக குளத்தின் 4 பக்கமும் தடுப்பு பகுதியில் உள்ள தண்ணீர் முழுவதும் நடுப்பகுதியில் விடப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட உள்ளது. முழுவதுமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதும் நளதீர்த்தம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.

    சனிப்பெயர்ச்சி தினம் மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து 24 மணி நேரமும் குளத்திலிருந்து பழைய தண்ணீர் வெளியேற்றப்பட்டு, புதிதாக தண்ணீர் நிரப்புவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி பகவானை தரிசனம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. பொது தரிசனம், ரூ.200 கட்டண தரிசனம், ரூ.500 கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் என்று 4 வகையான தரிசன பாதைகள் அமைக்கப்படுகின்றன.

    பொது தரிசனத்திற்கு வடக்கு வீதியில் உள்ள வரிசை வளாகத்தின் வழியாகவும், ரூ.200 கட்டண தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு (தனித்தனியாக) தெற்கு வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி தீர்த்தத்திற்கு மேற்கு பகுதி வழியாகவும், ரூ.500 கட்டண தரிசனம் சன்னதி தெருராஜ கோபுரம் வழியாகவும் வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 
    Next Story
    ×