search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை கூடையில் வைத்து ஏழுமலையான் கோவில் அர்ச்சகர் தலையில் சுமந்த வந்த காட்சி.
    X
    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை கூடையில் வைத்து ஏழுமலையான் கோவில் அர்ச்சகர் தலையில் சுமந்த வந்த காட்சி.

    மூலவர், உற்சவ மூர்த்திக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் திருமலைக்கு வந்தன

    பிரம்மோற்சவ விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் பாதுகாப்பாக திருமலைக்கு வந்தன. அந்த மாலைகள் மூலவர், உற்சவ மூர்த்திக்கு இன்று அணிவிக்கப்படுகின்றன.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது.

    அதனை முன்னிட்டு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவை வாகனங்களில் பலத்த பாதுகாப்போடு திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அந்த மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவற்றை கூடைகளில் வைத்து திருமலையில் உள்ள ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து சிறப்புப்பூஜை செய்யப்பட்டது.

    பின்னர் ஜீயர் மடத்தில் இருந்து மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் திருமலையில் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டன.

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளில் ஒன்று, இன்று (புதன்கிழமை) மூலவருக்கு அணிவிக்கப்படுகிறது. மற்றொரு மாலை, பட்டு வஸ்திரம், கிளிகள் கருடசேவையின்போது கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படுகிறது. அத்துடன் ஏழுமலையான் கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் மகர கண்டி எனப்படும் லட்சுமி ஆரமும் அணிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×