search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாளய அமாவாசை: கவனிக்க வேண்டியவை
    X

    மகாளய அமாவாசை: கவனிக்க வேண்டியவை

    நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.
    விவாகரத்தில் இறந்தவர்களுக்கு 19-ந்தேதி தர்ப்பணம் :

    விவாகரத்து பெற்றவர்களில் சிலருக்கு கடைசி வரை வேறு திருமணம் நடக்காது. அவர்கள் மனக்குறையுடன் உயிர் விட நேரிடலாம். சிலர் சுவாச கோளாறால் இறந்தவர்கள் இத்தகைய பித்ருக்களுக்கு (19-ந்தேதி) தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம்.

    திலா ஹோமம் :

    மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசி யம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர் களால்தான் செய்ய வேண்டும்.

    திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப் படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு. சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

    திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருட பகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர் வதிப்பதாக அர்த்தம்.

    வைஷ்ணவ சம்பிர தாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக் களின் ஆசிர்வாதம் பெறலாம்.

    வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.

    பெற்றோர் படத்துக்கு துளசி மாலை :

    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப் பிக்க வேண்டும். துளசி வாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.

    முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீர தன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.



    என்ன செய்ய வேண்டும்? :

    மகாளய அமாவாசை தினத்தன்று 4 முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.
    1. புனித நதிகளில் நீராட வேண்டும்.
    2. பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    3. மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.
    4. தானங்கள் கொடுக்க வேண்டும்.
    கிடைக்கும் பலன்கள்
    மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் வருமாறு:-
    1. ஆயுள் நீடிக்கும்.
    2. நோய்கள் விலகும்.
    3. குழந்தை செல்வம் கிடைக்கும்.
    4. செல்வ செழிப்பு ஏற்படும்
    5. விரும்பியது கை கூடும்.

    பித்ரு பூஜைக்குரிய இடங்கள் :

    பிதுர்பூஜை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் பல இடங்கள் உள்ளன. கடற்கரையோரங்களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடலும் கூடும் கன்னியாகுமரி கடற்கரை, பூம்புகார், வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள கோடியக்கரை ஆகியவை சிறந்தது என்பர். அதேபோல் காவேரிக் கரையோரத் திருத்தலங்களுக்கு அருகிலுள்ள நதிக்கரையும் போற்றப்படுகிறது.

    ஸ்ரீரங்கம் தென் பகுதியிலுள்ள அம்மா மண்டபம் படித்துறை, திருப்பராய்த்துறை, திரிவேணிசங்கமம், திருச்சி ஜீயர்புரத்திற்கு அருகிலுள்ள முக்கொம்பு, திருவையாறு புஷ்யபடித்துறை, மயிலாடுதுறை நந்திக்கட்டம், கும்பகோணம் அருகிலுள்ள அரிசலாறு படித்துறை போன்ற நதிக்கரைகள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. குடந்தை மகாமகக் குளம், சக்கரத் தீர்த்தம் ஆகியவையும் சிறந்தவையாகும்.

    புனிதத் தலமான காசியில், கங்கை நதி ஓடிவரும் வழியிலுள்ள மணிகர்ணிகா புட்கரணியும் தலைசிறந்து விளங்குகிறது. மணிகர்ணிகா என்ற இடத்தில் செய்யப்படும் பிதுர்பூஜை பதினாறு தலைமுறைக்கு பித்ரு சாபங்களை நீக்கக்கூடியது. காசியிலுள்ள மணிகர்ணிகா நீர்நிலைக்குச் செல்ல வசதி யில்லாதவர்களுக்கு, தமிழகத்தில் அதற்கு சமமாகக் கருதப்படும் மணிகர்ணிகா கட்டங்கள் உள்ளன. அங்கு முன்னோர்களுக் கான பிதுர்பூஜை செய்யலாம்.

    வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது. ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டு அருள்புரியும் சென்னை திருநீர்மலைக்கு அருகில் மணிகர்ணிகா புட்கரணி தீர்த்தம் உள்ளது. மேலும் திருவெள்ளறை திருத்தலத்தின் புனிதத் தீர்த்தங்களில் ஒன்று மணிகர்ணிகா தீர்த்தம். இந்த இடங்களிலும் பிதுர்பூஜை செய்வதால் நல்ல பலன்கள் கிட்டும்.

    சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலயத் திருக்குளம், கும்பகோணம் நன்னிலம் பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள திலதைப்பதியில் உள்ள புனித தீர்த்தம், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை, ஸ்ரீவாஞ்சியம் தலத்திலுள்ள குப்தகங்கை குளக்கரை, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில், சந்திர தீர்த்தம் அருகேயுள்ள ஆலமரத்தடி ருத்ரபாதம், சேலம் சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின்பகுதியிலுள்ள தீர்த்தக்கட்டம் உள்ளிட்ட பல இடங்களும் சிறப்பு வாய்ந்தன.

    புனிதத் தலங்களுக்குச் செல்ல முடியாத வயதானவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னரை அழைத்து பிதுர்பூஜை செய்யச் சொல்லி பயன்பெறலாம்.



    எப்போது கொடுப்பது?  :

    தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக் கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.

    முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.

    எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.

    நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது ‘ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி’ என்று சொல்ல மறந்து விடக்கூடாது.

    பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.

    பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது.

    அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். முடியாதவர்கள் வரும் மகலாயபட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பண பூஜைகளை கட்டாயமாக செய்ய வேண்டும்.

    உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும். அப்படிப் பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும்.

    தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

    எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    என்ன சொல்ல வேண்டும்?  :
     
    பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம் எனவே தர்ப்பணம் கொடுக்கும் போது கீழ்கண்டவாறு மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் போதும்...

    “என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும்.

    நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
    Next Story
    ×