search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நேற்று மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடிய காட்சி.
    X
    நேற்று மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

    மயிலாடுதுறை துலாகட்டத்தில் 6-வது நாளாக 1 லட்சம் பக்தர்கள் புனிதநீராடினர்

    மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா நடைபெற்று வருகிறது. விடுமுறை நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சம் பக்தர்கள் புனிதநீராடினர்.
    நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இந்த நாளில் தினமும் ஏராளமான பக்தர்கள் காவிரி துலாகட்டத்தில் புனிதநீராடி வருகின்றனர்.

    காவிரி மகாபுஷ்கர விழாவின் 6-ம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், புரட்டாசி மாத பிறப்பு நாளாக இருந்ததாலும் துலாகட்டத்தில் அதிகாலை 2 மணியில் இருந்தே திரளான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனிதநீராடி சென்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக கூறப்படுகிறது.

    பக்தர்கள் புனிதநீராடிவிட்டு துலாகட்ட பகுதியில் உள்ள துண்டி விநாயகர், கேதாரநாதர், நந்தி பகவான் ஆகிய சாமிகளை வழிபட்டனர். மேலும், துலாகட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காவிரி அம்மன் சிலைக்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பெண்கள், அகல்விளக்கில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.


    காவிரி மகா புஷ்கர விழாவுக்காக வந்த பக்தர்கள் அகல் விளக்கேற்றிய காட்சி.

    முன்னதாக காவிரி துலாகட்ட வடக்கு கரையில் 6-ம் நாளான நேற்று குழந்தை வரம் அளிக்கும் புத்திர காமேஷ்டி யாகம் நடைபெற்றது. இதையொட்டி சந்தான பரமேஸ்வருக்கும், சந்தான கோபாலகிருஷ்ணருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாக குண்டத்தில் பல்வேறு பொருட்கள் செலுத்தி புத்திர காமேஷ்டி யாகமும், சண்முக ஹோமும் செய்யப்பட்டது.

    இதில் திருமணமான திரளான பெண்கள் கலந்து கொண்டு குழந்தை வரம் வேண்டி வழிபாடு செய்தனர். இன்று (திங்கட்கிழமை) கல்வி ஞானம் சேர்க்கும் ஹயக்ரீவ, தட்சிணாமூர்த்தி ஹோமமும், ஸ்ரீவித்யா மகா சரஸ்வதி ஹோமமும் நடக்கிறது. விழாவையொட்டி காவிரி துலாகட்ட வடக்கு கரையில் அன்னபூர்ணேஸ்வரர்-அன்னபூர்ணேஸ்வரிக்கு தீர்த்தவாரியும் நடைபெற்றது.
    Next Story
    ×