search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விழாவில் காவிரி அம்மன், அகத்தியர் சிலைகளுக்கு தீபாராதனை நடைபெற்ற காட்சி.
    X
    விழாவில் காவிரி அம்மன், அகத்தியர் சிலைகளுக்கு தீபாராதனை நடைபெற்ற காட்சி.

    காவிரி மகா புஷ்கர விழா: கல்லணையில் காவிரி அம்மன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

    காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி கல்லணையில் அகத்தியர், காவிரி அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    காவிரி கரையோர பகுதிகளில் மகா புஷ்கர விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. வருகிற 23-ந் தேதி வரை விழா நடக்கிறது. இதற்கிடையே காவிரி புஷ்கர விழாவிற்காக மேட்டு்ர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லை-ணையை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகி

    விடுமுறை நாளான நேற்று கல்லணைக்கு ஏராளமானோர் வருகை தந்தனர். அவர்கள் அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு ரசித்தனர். இந்நிலையில் காவிரி மகா புஷ்கர விழா கல்லணையில் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறகட்டளையின் சார்பில் நேற்று நடைபெற்றது.

    விழாவையொட்டி காலையில் ஓதுவார்கள் திருமுறை பாடல்கள் பாடியவாறு கல்லணை கால்வாய், வெண்ணாறு, காவிரி பாலத்தின் வழியாக வந்தனர். பின்னர் ஓதுவார்கள் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குறுமுனி அகத்தியர் சிலைக்கு, காவிரி நீரால் அபிஷேகம் செய்து மாலை சூட்டி தீபாராதனை காண்பித்தனர்.


    காவிரி மகாபுஷ்கர விழாவுக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    இதைத்தொடர்ந்து திருமுறைகள் பாடியவாறு கொள்ளிடம் ஆற்று பாலத்திற்கு சென்ற ஓதுவார்கள் கரிகாலன் சிலை எதிரில் அமைந்துள்ள காவிரி அம்மன் சிலைக்கும் காவிரி நீரால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அப்போது ஒதுவார்கள் மழை வேண்டி பதிகம் பாடினார்கள். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் யோகி பிரமானந்தா சுவாமிகள், கோவில்பத்து தங்கமணி சுவாமிகள், பாலையன், மகேந்திரசுவாமிகள் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் சந்திரமோகன், கோவிலடி ராஜா, ஓதுவார்கள், பொதுப்பணித்துறை பணியாளர்கள் மற்றும் திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவையொட்டி கல்லணையில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள், சார்லஸ்தேவி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதேபோல, திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் உள்ள மண்டபத்தில் காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. விழாவின் 6-வது நாளான நேற்று காவிரி தாய் மகா வழிபாடு நடை பெற்றது. இதில் சிவனடியார்கள் கலந்துகொண்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தினர். திருவாசகம் முற்றோதுதலை அப்பர்குடில் பழ.அடியார் தொடங்கி வைத்தார். இதில் சிவனடியார் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு திருவாசகம் படித்தனர்.விழாவின் போது பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடினர்.
    Next Story
    ×