search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வனபத்ரகாளியம்மன் அருள்பாலிப்பதையும், பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.
    X
    வனபத்ரகாளியம்மன் அருள்பாலிப்பதையும், பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியையும் படத்தில் காணலாம்.

    வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

    மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து அமக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், தீபாராதனை நடந்தது. மேலும் லட்சார்ச்சனை, கிராம சாந்தி, பகாசூரன் வழிபாடு, கொடியேற்றம், குண்டம் திறத்தல், பொங்கல் வழிபாடு, சிம்ம வாகனத்திற்கு சிறப்பு அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே கோவிலுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வர தொடங்கினர். கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து கோவை பொதுப்பணித்துறை ஸ்ரீஅம்மன் அறக்கட்டளை சார்பில் அம்மன் அழைப்பு நடந்தது. அப்போது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், சிவப்பு நிற பட்டு உடுத்தி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மேள தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வெங்கடாசலம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் காலை 6 மணிக்கு குண்டம் இறங்கும் இடத்தை அடைந்ததும் தலைமை பூசாரி பரமேஸ்வரன் குண்டத்தை வலம் வந்து சிறப்பு பூஜை செய்தார்.


    கோவில் தலைமை பூசாரி பரமேஸ்சுவரன் கையில் சூலத்துடனும், பக்தர்கள் குழந்தைகளுடனும் குண்டம் இறங்கியதை படத்தில் காணலாம்.

    பின்னர் திரிசூலத்துக்கு பால் மற்றும் இளநீரால் அபிஷேகம் செய்து குண்டத்தில் மல்லிகை மலர்செண்டு, எலுமிச்சை பழம் உருட்டி விடப்பட்டது. அவை கருகாமல் குண்டத்தில் இருந்து வெளியே வந்தது. தொடர்ந்து கையில் சூலத்துடன் தலைமை பூசாரி பரமேசுவரன் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள் சிவமணி கற்பூர தட்டு எடுத்தும், மணிகண்டன் கோலமுடி எடுத்தும், கனகராஜ் சக்தி கரகம் எடுத்தும், செல்வம் சிவன் கரகம் எடுத்தும் குண்டத்தில் இறங்கினர். அவர்களை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திகடனை செலுத்தினர். சிலர் அக்னி சட்டி எடுத்தும், கையில் குழந்தையை தூக்கி கொண்டும் இறங்கி வந்தனர். குண்டம் இறங்கும் நிகழ்ச்சி பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது.

    பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும் அம்மனுக்கு அக்னி அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையர் க.ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் நாடார் இளைஞர் பராமரிப்புக்குழு தலைவர் தயாநிதி, உதவி தலைவர் அய்யாசாமி ஆகியோர் மேற்பார்வையில் 36 பேர் குண்டம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். குண்டம் இறங்கிய ஒரு சில பக்தர்களுக்கு கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த இலவச மருத்துவ முகாம் களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    திருவிழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் வீரர்கள் குண்டம் இறங்கும் இடத்திலும், பவானி ஆற்றின் கரையோர பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு தலைமையில் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மேற்பார்வையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    Next Story
    ×