search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உச்சிக்கருப்பணசாமி கோவிலில் ஆண்கள் மட்டும் வழிபடும் முக்கனிகள் மாற்றும் திருவிழா
    X

    உச்சிக்கருப்பணசாமி கோவிலில் ஆண்கள் மட்டும் வழிபடும் முக்கனிகள் மாற்றும் திருவிழா

    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பிரிவு சாலையில் பிரசித்தி பெற்ற உச்சிக்கருப்பணசாமி கோவிலில் ஆண்கள் மட்டும் வழிபடும் முக்கனிகள் மாற்றும் திருவிழா நடைபெற்றது.
    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பிரிவு சாலையில் பிரசித்தி பெற்ற உச்சிக்கருப்பணசாமி கோவில் உள்ளது. இங்கு சாமி சிலைக்கு பதிலாக, 2 தூண்களுடன் உள்ள ஒரு பீடத்தின் இருபுறமும் வீச்சு அரிவாள் மட்டுமே உள்ளன. இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய வெண்கல மணிகள் ஏராளமாக கட்டி தொங்க விடப்பட்டுள்ளன.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று, பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் கனிகள் மாற்றி வழிபடும் வினோத வழிபாடு நடத்தப்படுகிறது. இதில் ஆண் பக்தர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.அதன்படி நேற்று இந்த கோவிலில் முக்கனிகள் மாற்றும் வினோத வழிபாட்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    அப்போது ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறியதற்காக முக்கனிகளை வைத்து வழிபட்டனர். பின்பு கோவிலை விட்டு வெளியேறும் போது பெண்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, தங்களது நெற்றியில் பூசிய விபூதியை அழித்து விடுகிறார்கள்.

    விழாவையொட்டி முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வாசல் அருகில் இருந்து ஒரு டிராக்டரில் டன் கணக்கில், முக்கனிகளான மா, பலா, வாழைப்பழங்களை ஏற்றி ஊர்வலமாக உச்சிக்கருப்பணசாமி கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. பின்பு உச்சிக்கால வேளையில் சாமிக்கு மலை போல முக்கனிகளை படைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    இதில் ஏராளமான ஆண்பக்தர்கள் மட்டும் பங்கேற்று பயபக்தியுடன் சாமியை வழிபட்டனர். பூஜைக்கு பின்பு ஒவ்வொரு பக்தருக்கும் பிரசாதமாக பழங்கள் வழங்கப்பட்டன. அதை வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்ற கோவில் நிபந்தனையின்படி கோவில் வளாகத்திலேயே பழங்களை சாப்பிட்டு சென்றனர்.
    Next Story
    ×