search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சர்வதேச திருக்குர்ஆன் போட்டி: இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற தமிழர்
    X

    சர்வதேச திருக்குர்ஆன் போட்டி: இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற தமிழர்

    துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருதில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒரே தமிழர் முஹம்மது அர்கம் முஹம்மது ஹுசைன்.
    துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருதில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்களில் ஒரே தமிழர் முஹம்மது அர்கம் முஹம்மது ஹுசைன் (வயது 15). இவர் இலங்கையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கண்டி நகரத்தைச் சேர்ந்தவர்.

    தனது பன்னிரெண்டாவது வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்து, ஒருநாளில் மூன்று பக்கங்கள் வீதம் மனனம் செய்ய ஆரம்பித்து ஒரே வருடத்தில் மொத்த குர்ஆனையும் மனனம் செய்து முடித்தவர். தனது பள்ளிப் படிப்பையும் கைவிடாமல் அதிலும் கவனம் செலுத்தி இப்போது 9 ஆவது வகுப்பில் படிக்கிறார்.

    குர்ஆன் மனனம் மீதான ஆர்வத்தைப் பற்றி முஹம்மது அர்கத்திடம் கேட்ட போது, தான் பள்ளிக்கு செல்லும்போது அங்கு இமாம் வழிநடத்த மற்றவர்கள் தொழுவதைப் பார்த்து, தானும் இமாம் இடத்தில் நின்று தொழுகை நடத்த வேண்டுமென்ற உந்துதலால்தான் தனக்குக் குர்ஆன் மனனம் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது என்றவர்.

    தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் ஒவ்வொருவரையும் தாங்கள் பெரியவனானதும் என்னவாக விருப்பமென்று கேட்டுக் கொண்டிருந்தபோது, ஒவ்வொருவரும் மருத்துவர், பொறியாளர் என்று சொல்ல, முஹம்மது அர்கம் தான் ஒரு மௌலவி ஆக வேண்டுமென்று சொன்னாராம். ஆசிரியருக்கு அப்படியென்றால் என்னவென்று விளங்காமல் மற்ற ஆசிரியரிடம் இது குறித்து கேட்டிருக்கிறார். மௌலவி என்றால் இஸ்லாமிய மத அறிஞர் என்று விளக்கிய ஓர் இஸ்லாமிய ஆசிரியர் முஹம்மது அர்கத்தின் ஆர்வத்தை அவரது பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.



    மகனின் விருப்பத்தை அறிந்த தந்தை ஹுசைன் இவரை ‘ஹக்கானியா’ என்ற திருக்குர்ஆனைப் பயிலும் பள்ளியில் சேர்த்துள்ளார். திருக்குர்ஆனுடன் தொடர்பு வைத்துக் கொள்வது தனக்கு மிகவும் விருப்பமானது நெருக்கமானது என்றார் முஹம்மது அர்கம்.

    என்னைப் பார்த்து வளர்ந்த என் தங்கைகளும் தம்பிகளும் குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கியுள்ளனர். என்னுடைய ஒன்பது வயது தம்பி முவாஸும் குர்ஆனை மனனம் செய்து முடித்துவிட்டார்” என்று பெருமிதம் கொள்ளும் முஹம்மது அர்கம் சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவரும் வகையில் மிகவும் அழகான குரலில் குர்ஆனை வாசித்த போது ஒரேயொரு இடத்தில் மட்டும் தவறு இழைத்தார்.

    அவருடைய தந்தை ஹுசைனும் தன் மகனை உற்சாகப்படுத்தி மனனம் செய்யும் பயணத்தில் துணையாக உள்ளார். பரிசு பணம் முக்கியமல்ல தவறில்லாமல் மனனம் செய்து வாசித்து வெற்றி பெறுவதுதான் முக்கியமென்கின்றனர் தந்தையும் மகனும்.

    ஹக்கானியா பள்ளியில் பயன்றவர் வெற்றி பெற்றுத் தம் நாட்டுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவரது  வருங்காலத் திட்டம் குறித்துக் கேட்ட போது, மார்க்க சட்ட திட்டங்களைச் சரியாகக் கற்க வேண்டும்; மனனம் செய்த திருக்குர்ஆன் வசனங்களின் விளக்கத்தையும் மனனம் செய்ய வேண்டும்; அரபி மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்; மௌலவியாக வேண்டும் என்று சொன்னவர், கற்றதை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்பதே தமது தலையாய லட்சியம் என்றார்.

    இவர் இப்போட்டியில் வெற்றி பெறுவாரா தம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பாரா என்று இன்னும் சில தினங்களில் இப்போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.

    - ஜெஸிலா பானு.

    முஹம்மது அர்கம் ஓதுவதை இக்கானொளியில் காணலாம்:

    https://youtu.be/89VCJLeUPXM
    Next Story
    ×