search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன்னோர் ஆசி தரும் கருட சேவை
    X

    முன்னோர் ஆசி தரும் கருட சேவை

    கருட சேவையை பக்தர்கள் மட்டுமின்றி, மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவம் நாளை (சனிக்கிழமை) 23-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையட்டி 9 நாட்களுக்கு சுப்ரபாதம், அபிஷேக சேவையை தவிர தினந்தோறும் மற்றும் வாராந்திர சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையே பிரமோற்சவம் தொடங்குவதால் ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சி கரைபுரண்டோடுகிறது.
    பிரமோற்சவத்திற்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் பிரமோற்சவ வாகன சேவையின் போது தனியிடம் ஒதுக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களுக்கு அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அறைகள் ஒதுக்கப்படும்.

    பிரம்மோற்சவம் சமயத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்பதால் ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரமோற்சவத்தையொட்டி கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

    எனவே அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்திருப்பவர்கள் தங்கள் பயணத் திட்டத்தை அதற்கு ஏற்ப அமைத்து கொள்வது நல்லது.

    சுவாமி வீதி உலா விவரம் வருமாறு:-

    செப்டம்பர் 23-ம்தேதி மாலை பிரமோற்சவம் கொடியேற்றப்படுகிறது. அன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

    இரவு பெரிய சேஷ வாகனம், 24-ம் தேதி காலை சிறிய சேஷ வாகனம், இரவு அம்ச வாகனம், 25-ம் தேதி சிம்ம வாகனம், இரவு முத்துப் பந்தல் வாகனம், 26-ம் தேதி கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வபூபாள வாகனம், 27-ம் தேதி பல்லக்கு உற்சவம், இரவு கருட சேவை நடைபெறும்.



    கருட சேவை வழிபாடு மிகுந்தபுண்ணியத்தைத் தரவல்லது. எனவேதான் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம் செய்யவே அதிக பக்தர்கள் திரள்வார்கள். திருப்பதியில் இந்த ஆண்டு 27-ந் தேதி (புதன்கிழமை) பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு அன்று அனுமதி இல்லை.

    கருட சேவையை பக்தர்கள் மட்டுமின்றி, மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலை விட்டு நீங்கும் எல்லா ஆன்மாக்களும் இறைவன் காலடி நிழலில் இளைப்பாறும் பாக்கியத்தை எளிதில் பெற்று விட முடியாது.

    கர்ம வினைகள் காரணமாக பல ஆத்மாக்களால் மோட்சத்தை எட்ட இயலாது. அத்தகைய ஆன்மாக்கள் தங்கள் துன்பங்கள், துயரங்களில் இருந்து விடுபட கருட சேவையை கண்டால் பலன் கிடைக்கும். எனவே ஆத்மாக்கள் கருட சேவை தினத்தன்று பூலோகம் வர கருடன், பெருமாளிடம் சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.
    இந்த சலுகையை பயன்படுத்தி பித்ருக்கள், கருட சேவையை தரிசனம் செய்ய வருவார்கள். அப்போது அவர்கள் கருட சேவையைக் காண தம் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள் யாராவது வந்து இருக்கிறார்களா என்று தேடுவார்கள்.

    நாம் கருட சேவையை காண சென்றிருந்தால் நம் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். மனம் குளிர நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள்.
    எனவே கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் தரும் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியையும் நாம் எளிதில் பெற முடியும். ஆகையால் 27-ந் தேதி வர உள்ள கருட சேவையை மறந்து விடாதீர்கள்.

    பக்தர்கள் வசதிக் காக திருப்பதிக்கு 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் 24 மணி நேரமும் மலைபாதையை திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    28-ம் தேதி அனுமந்த வாகனம், மாலை தங்கரதம், இரவு கஜ வாகனம், 29-ம் தேதி சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 30-ம் தேதி காலை ரத உற்சவம், இரவு அஸ்வ வாகனம், அக்டோபர் 1-ம் தேதி சக்கரஸ்நானம், மாலை கொடியிறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறும். பிரம்மோற்சவ விழாவை ரூ.8 கோடி செலவில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×