search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கர்த்தரை நம்பினால் அற்புதங்களை காணலாம்
    X

    கர்த்தரை நம்பினால் அற்புதங்களை காணலாம்

    கர்த்தருடைய ஆவியானவர் தாமே உங்களோடிருந்து உங்கள் சகல சிறையிருப்புகளையும் மாற்றி நீங்கள் இழந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் உங்களுக்கு நிச்சயம் தருவார்.
    இன்றைக்கு பலவிதமான ‘சிறையிருப்புகளில்’ அநேகர் சிக்குண்டு எவ்வாறு வெளியே வருவது என வழி தெரியாமல் திகைக்கின்றனர்.

    ‘சிறையிருப்பு’ என்றால் என்ன?

    வியாதி, பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், பிசாசினால் வரும் போராட்டங்கள் இவை அனைத்தும் சிறையிருப்புகளே. இச்செய்தியை வாசிக்கிற உங்களுக்குள்ளும் சில சிறையிருப்புகள் காணப்படலாம். ஆனால் அவைகள் எல்லாவற்றிலுமிருந்து கர்த்தர் உங்களை நிச்சயம் விடுதலையாக்குவார்.

    எதனால் சிறையிருப்பு

    “அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஓப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்தார். அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.” நியாய.6:11

    மேற்கண்ட வசனத்தில் தேவனுடைய பிள்ளைகள் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தபோது ஆண்டவர் அவர்களை மீதியானியர் கையிலே ஒப்புக் கொடுத்தார் என வாசிக்கிறோம்.

    ஆம், சில நேரங்களில் நாம் கர்த்தருக்கும், கர்த்தருடைய சித்தத்திற்கும் விரோதமாய் செயல்படும் போது சத்துரு நமக்கு விரோதமாக கிரியை செய்ய இடம் கொடுத்து விடுகிறோம். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இஸ்ரவேல் மக்களுக்கு நடந்தது. இந்த செய்தியை நீங்கள் வாசிக்கும்போது உங்களுக்கு வந்த உபத்திரவத்திற்கு காரணம் என்ன என்பதை தேவனுடைய சமூகத்தில் அமர்ந்து சற்று நிதானித்துப் பாருங்கள்.

    “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப் படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால், ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல, அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.” யாக்.1:13,14

    ஆகவே தேவனுடைய பிள்ளையே! இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் பார்வையில் பொல்லாப்பானதை செய்தபோது 7 வருடம் மீதியான் கையிலே ஒப்புக் கொடுத்தார். நீங்களும் எதாகிலும் சிறையில் அகப்பட்டிருந்தால் உங்களுடைய ஆன்மிக வாழ்க்கையை சற்று சீர்தூக்கிப் பாருங்கள். நீங்கள் மனஸ்தாபப்படும் போது நிச்சயம் உங்களுக்காக மனம் இரங்குவார்.

    சிறையிருப்பு கொடுமையானது

    “மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக் கொண்டார்கள்.

    அவர்களுக்கு எதிரே பாளையமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள்.

    அவர்கள் தங்கள் மிருக ஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள். அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும். இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.” நியாய.6:2,4,5

    தேவனுடைய பிள்ளையே! கர்த்தருடைய பலத்தினால் கம்பீரமாய் வாழக்கூடிய இஸ்ரவேல் மக்கள் மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக் கொண்டபடியால், குகைகளுக்கும் அரண்களுக்கும் ஓடி ஒளிய வேண்டிய சூழ்நிலை வந்தது. இஸ்ரவேல் மக்கள் நிலத்தின் விளைச்சலை மீதியானியரும், அமலேக்கியரும், கிழக்கத்தி புத்திரரும் கெடுத்து ஆசீர்வாதத்தை இழந்து போகும்படி செய்தார்கள். மேலும், இஸ்ரவேலின் ஆடு, மாடுகளையும், கழுதைகளையும் திருடிக் கொண்டு சென்றார்கள்.

    தேவனுடைய பிள்ளையே! சத்துருவின் சிறையிருப்புக்குள் நாம் செல்லும்போது நம்மையும் நம்முடைய எல்லாவற்றையும் அழிப்பதே சாத்தானின் தந்திரமாகும்.

    இயேசு சொன்னார், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” யோவான் 10:10

    ஆம் தேவ பிள்ளையே! சத்துருவின் சிறையிருப்பு மிகவும் கொடுமையானது. உங்கள் வாழ்விலும் கடன் பிரச்சினை, பாவகட்டுகள், கொடிய வியாதிகள், தீராத குடும்ப பிரச்சினைகள் இவற்றினாலே மனசோர்வோடு காணப்படுகிறீர்களா? உங்களுக்கு ஓர் நற்செய்தியை கூற விரும்புகிறேன்.

    கர்த்தரை நோக்கிப் பாருங்கள்

    “இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.” நியாய.6:6

    எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே! உங்கள் சிறையிருப்பு சிறிதாக இருக்கலாம். பெரிதாக இருக்கலாம். எப்படிப்பட்ட கட்டுகளிலும், காவல்களிலும் நீங்கள் இருந்தாலும் உங்களை உண்டாக்கின தேவனை நோக்கி கூப்பிடுவீர்களா? நிச்சயம் நீங்கள் அவ்வாறு செய்யும்போது உங்களை விடுவிக்க அவர் வல்லவரும் உண்மை உள்ளவருமாக இருக்கிறார்.

    அன்றைக்கு இஸ்ரவேல் மக்கள் தேவனை நோக்கியும்போது உங்களை விடுவிக்க அவர் வல்லவரும் உண்மை உள்ளவருமாக இருக்கிறார். அன்றைக்கு இஸ்ரவேல் மக்கள் தேவனை நோக்கி முறையிடும்போது கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர் களிடத்தில் அனுப்பி அந்த தீர்க்கதரிசியின் மூலமாக இஸ்ரவேல் மக்களை கர்த்தர் பெலப்படுத்தினார்.

    ஒரு கிதியோனை கர்த்தர் எழுப்பி பராக்கிரமசாலியான அவனை உருவாக்கி அவன் நிமித்தம் இஸ்ரவேல் சிறையிருப்பில் சிக்கிக்கொண்ட இஸ்ரவேலரை விடுவித்தார்.

    நீங்களும் நானும் வாழ்ந்துக் கொண்டிருக்கிற இக்காலம் பரிசுத்த ஆவியானவருடைய நாட்கள். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்.”சகரி.4:6.

    ஆகவே கர்த்தருடைய ஆவியானவர் தாமே உங்களோடிருந்து உங்கள் சகல சிறையிருப்புகளையும் மாற்றி நீங்கள் இழந்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஐசுவரியத்தையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் உங்களுக்கு நிச்சயம் தருவார். ஆனால் கர்த்தரை மட்டும் சார்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், “இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்”, சென்னை- 54
    Next Story
    ×