

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச அணி 104 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
தனது சொந்த மண்ணில் வங்காளதேச அணி, பாகிஸ்தானை சாய்த்தது இதுவே முதல்முறையாகும்.
இந்தநிலையில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை முதல்முறையாக கைப்பற்றிய வங்காளதேசம் உள்ளூரில் முதல் தடவையாக அந்த அணிக்கு எதிரான தொடரை வெல்ல முழு முயற்சி மேற்கொள்ளும்.
அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு தொடரை சமன் செய்ய பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். எனவே இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் அந்த அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் அந்த அணிக்கு 8 புள்ளிகள் அபராதமாகவும் விதிக்கப் பட்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று தெரிவித்தது.
அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் அணி எடுத்துள்ள புள்ளியில் இருந்து அந்த தண்டனை புள்ளி குறைக்கப்படும். உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி (4 புள்ளி) 8-வது இடத்தில் உள்ளது.