

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வவ்போது சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில், பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை அவர் உருவாக்கி உள்ளார்.
நியூயார்க்கில் இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள அர்ஜென்டினா-ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பமாக பிபா உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.
இந்தச் சிற்பத்தில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவின் தேசியக் கொடிகளுடன், "FIFA உலகக் கோப்பை 2026 - இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள்" என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது.
மேலும், கால்பந்தின் மாபெரும் சின்னங்களில் ஒருவரான லயோனல் மெஸ்சியின் உருவத்தையும், "நாங்கள் மெஸ்சியை நேசிக்கிறோம்" என்ற செய்தியுடன் செதுக்கியுள்ளார்.
இந்தச் சிற்பத்தை உருவாக்க சுமார் 7 டன் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரது மணல் கலை நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தச் சிற்பத்தை நிறைவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:
பிபா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள். யார் வெல்வார்கள் என்று உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தங்கக் கோப்பையின் 8 அடி உயர மணல் சிற்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த முறை, 'வாழ்த்துக்கள்' என்ற செய்தியுடன் இந்த சிறப்பு சிற்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளுக்கும் எங்களின் வாழ்த்துகள்.
கால்பந்து ஜாம்பவானான லயோனல் மெஸ்சியைக் கவுரவிக்கும் வகையில், அவரது மணல் சிற்பத்தையும் உருவாக்கியுள்ளோம். கிழக்கு இந்தியாவில் கால்பந்துக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
கால்பந்து ஜாம்பவனான மெஸ்சியின் சிற்பத்தை, 'நாங்கள் மெஸ்ஸியை நேசிக்கிறோம்' என்ற செய்தியுடன் உருவாக்கி உள்ளோம். மெஸ்சி தனது தனித்துவமான ஆட்டத்தால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார் என தெரிவித்தார்.