உலகக் கோப்பை தகுதி சுற்றில் தோல்வி எதிரொலி: இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் ராஜினாமா

இத்தாலி அணி தோல்வி அடைந்த 2 நாட்களில் இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கேப்ரியல் கிரவினா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உலகக் கோப்பை தகுதி சுற்றில் தோல்வி எதிரொலி: இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் ராஜினாமா
Published on

ரோம்:

23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடக்கிறது. இதற்கான கடைசி தகுதி சுற்று கடந்த செவ்வாய்க்கிழமை அரங்கேறியது.

ஐரோப்பிய கண்டத்துக்கான பிளே-ஆப் சுற்றின் ஒரு இறுதி ஆட்டம் போஸ்னியாவில் உள்ள செனிகா நகரில் நடந்தது. இதில் 4 முறை சாம்பியனும், தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் அணியான இத்தாலி பெனால்டி ஷூட்-அவுட்டில் 1-4 என்ற கோல் கணக்கில் 65-வது இடத்தில் உள்ள போஸ்னியா அணியிடம் மண்ணை கவ்வியது. இதனால் இத்தாலி அணி தொடர்ந்து 3-வது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பறிகொடுத்தது. இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த சோகத்துக்குள்ளானார்கள்.

இத்தாலி அணி தோல்வி அடைந்த 2 நாட்களில் இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவர் கேப்ரியல் கிரவினா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது பயிற்சியாளர் ஜெனாரோ கட்டுசோவும் பதவியை விட்டு ஒதுங்க வழிவகுத்துள்ளது. 'இத்தாலி கால்பந்து முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் தெளிவாக தெரிகிறது. அதற்கான செயல்முறை புதிய தலைமையுடன் தொடங்க வேன்டும்' என்று இத்தாலி விளையாட்டு மந்திரி ஆந்த்ரே அபோடி கூறியிருந்த நிலையில், கேப்ரியல் கிரவினா பதவியை விட்டு விலகி இருப்பது அரசியல் அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது.

கேப்ரியல் கிரவினா கடந்த 2018-ம் ஆண்டு முதல் இத்தாலி கால்பந்து சம்மேளன தலைவராக இருந்து வந்தார். அத்துடன் ஐரோப்பிய கால்பந்து சங்க துணைத் தலைவராகவும் உள்ளார். இத்தாலி கால்பந்து சம்மேளனத்துக்கான புதிய தலைவர் தேர்தல் ஜூன் 22-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com