

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்சி உலக கோப்பையில் இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக ஆடியது இல்லை. பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அனைத்து முன்னணி நாடுகளுடன் ஆடி இருந்தார். முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக நாளை ஆடுகிறார். 39 வயதான மெஸ்சி 205 சர்வதேச போட்டிகளில் விளையாடி 125 கோல்களை பதிவு செய்துள்ளார்.
அர்ஜென்டினாவும், இங்கிலாந்தும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. கடைசியாக 2002-ம் ஆண்டு நடந்த போட்டியில் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் பாதியில் டேவிட் பெக்காம் பெனால்டியில் கோல் அடித்தார்.
உலக கோப்பையில் இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 3-ல், அர்ஜென்டினா 2-ல் வெற்றி பெற்றன. 1998 உலக கோப்பையில் 2- வது சுற்றில் மோதிய ஆட்டம் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா 4-3 என்ற கணக்கில் வென்றது.
1986 கால் இறுதியில் 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மரடோனா 2 கோல் அடித்தார். இதில் அவர் விதிமுறைக்கு மாறாக கையால் அடித்த கோல் கடவுளின் கை என்று அழைக்கப்படுகிறது. கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய தருணமாகும்.
1966-ம் ஆண்டு கால் இறுதியிலும் (1-0), 1962-ல் லீக் ஆட்டத்திலும் (3-1) இங்கிலாந்து வெற்றி பெற்றது. சர்வதேச போட்டி மற்றும் நட்பு ஆட்டம் என இரு அணிகளும் 14 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 6-ல், அர்ஜென்டினா 3-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டி டிரா ஆனது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.