

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு இன்று 12.30 மணிக்கு அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நடக்கிறது. இதில் ஐரோப்பாவின் பரம்பரை எதிரிகளான பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
பிரான்ஸ் 5-வது முறையாகவும், ஸ்பெயின் 2-வது தடவையாகவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளன.
2-வது அரை இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை (15-ந்தேதி) நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடக்கிறது. இதில் தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினா- ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே இந்த தொடரில் தோல்வியை தழுவவில்லை. இதனால் இறுதிப் போட்டியில் நுழைய அர்ஜென்டினாவும், இங்கிலாந்தும் கடுமையாக போராடும். இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
1978, 1986, 2022-ம் ஆண்டு சாம்பியனான அர்ஜென்டினா 7-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இதுவரை அந்த அணி அரை இறுதியில் தோற்றது கிடையாது.
இந்த தொடரில் தான் மோதிய அனைத்து ஆட்டத்திலும் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. லீக் ஆட்டங்களில் அல்ஜீரியா (3-0), ஆஸ்தி ரியா (2-0), ஜோர்டான் (3-1 ) ஆகியவற்றையும், 2-வது சுற்றில் கேப் வெர்டேயையும் (3-2), 3-வது ரவுண்டில் எகிப்தை யும் (3-2 ) , கால் இறுதியில் சுவிட்சர்லாந்தையும் (3-1) வீழ்த்தியது.
இதில் புதுமுக அணியான கேப் வெர்டேயிடம் கடுமையாக போராடித்தான் வென்றது. இதே போல எகிப்துக்கு எதிராக 2 கோல்கள் வாங்கிய பிறகே 3 கோல்களை போட்டது. மேலும் இந்த ஆட்டத்தில் நடுவரின் முடிவு மிகுந்த சர்ச்சை ஏற்படுத்தியது. பின்களத்தில் பலவீனமாக இருக்கும் அர்ஜென்டினா அதை சரிசெய்வது அவசியமாகும். நாக் அவுட்டில் 2 போட்டியில் கூடுதல் நேரத்தில்தான் வெற்றி பெற்றது.
உலகின் தலைசிறந்த வீரரும், கேப்டனுமான லியோனல் மெஸ்சி அர்ஜென்டினா அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். அவர் 8 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஒட்டு மொத்த உலக கோப்பையிலும் 21 கோல்கள் அடித்து சாதனையாளராக உள்ளார். சுவிட்சர்லாந்துக்கு எதிராக கோல் அடிக்கவில்லை. இதன் மூலம் உலக கோப்பையில் தொடர்ச்சியாக கோல் அடித்து வந்த அவரது சாதனை 9 போட்டியோடு முடிந்தது.
சக வீரர்கள் கோல் அடிப்பதிலும் மெஸ்சியின் பங்களிப்பு இருந்து வருகிறது. 2 கோலுக்கு உதவியாக இருந்துள்ளார். இது தவிர மார்ட்டினஸ், என்சோ பெர்னாண்டஸ், ரோமிரோ, ஜிவோனி செல்சோ, ஜூலியன் அல்வாரெஸ், லிசாண்ட்ரோ மார்டினெஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் போன்ற சிறந்த வீரர்களும் அர்ஜென்டினா அணியில் உள்ளனர்.
1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து 4-வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வேட்கையில் இருக்கிறது. 1966-ல் உலக கோப்பையை வென்ற பிறகு இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது இல்லை. 1990, 2018-ல் அரை இறுதியில் தோற்றது.
இங்கிலாந்து அணி லீக் ஆட்டங்களில் குரோஷியா (4-2), பனாமா (2-0), ஆகியவற்றை தோற்கடித்தது. கானாவுடன் (0-0) டிரா செய்தது. 2-வது சுற்றில் காங்கோ வையும் (2-1), 3-வது ரவுண்டில் மெக்சிகோவையும் (3-2 ), கால் இறுதியில் நார்வேயையும் (2-1) வீழ்த்தியது.
இந்த போட்டி தொடரில் இங்கிலாந்து வலுவாக திகழ்கிறது. கேப்டன் ஹாரி கேன், ஜூடே பெலிங்கம் ஆகியோர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். இருவரும் 6 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளனர். முன் களத்தில் இருவரும் பலமாக இருக்கிறார்கள்.
இது தவிர ஷக்கா, அந்தோனி கார்டன், எல்லியாட் ஆண்டர்சன், ரைஸ் போன்ற சிறந்த வீரர்களும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவும், 4-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தும் மோதுவது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.