

உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ்- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின, இதில் ஸ்பெயின் 2-0 என வெற்றி பெற்றது.
பலப்பரீட்சை:
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இங்கிலாந்து முன்னிலை:
ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் கணக்கை தொடங்க முடியாமல் தவித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் இரு அணிகளும் வீரர்களை மாற்றுவதில் ஆர்வம் செலுத்தின.
சரியாக 55-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் மோர்கன் ரோஜர்ஸ் அசிஸ்ட் செய்ய அந்தோனி ஜோர்டன் கோல் அடித்தார். இதனால், இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.
வெற்றி:
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இறுதியில் 85-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி அசிஸ்ட் செய்ய என்சோ ஃபெர்னான்டஸ் கோல் அடித்தார்.
இதனால் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது. மேலும், ஆட்டத்தின் 90-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி தனது இரண்டாவது கோலை அடித்தது.
இந்த முறை மெஸ்ஸி அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் கோல் அடித்தார். இதனால், அர்ஜென்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.
இதன் பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.