அர்ஜென்டினாவை வீழ்த்த அனைத்து வியூகத்தையும் பயன்படுத்துவோம்: ஸ்பெயின் பயிற்சியாளர் சொல்கிறார்

அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.
Luis de la Fuente
Luis de la Fuente
Published on

அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்துவதற்கு எங்களிடம் உள்ள அனைத்து வியூகங்களையும் பயன்படுத்துவோம். அர்ஜென்டினாவை தோற்கடிப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.

உலக கோப்பையை வெல்வதற்காக போராடும் வாய்ப்பு கிடைத்து இருப்பது ஒரு பாக்கியம். கடந்த சில ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஒரு நாட்டிற்கு எதிராக வெற்றி பெற எங்களின் அனைத்து பலங்களையும் பயன்படுத்த முயற்சிப்போம்.

அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

36 வெற்றி

லூயிஸ் டி லா புவென்டே ஸ்பெயின் அணிக்கு 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். 36 ஆட்டத்தில் அவர் ஸ்பெயின் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். 10 போட்டி ‘டிரா’ ஆனது. 2 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 48 போட்டிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் ஸ்பெயின் அணி 2023-ம் ஆண்டு ஐரோப்பிய தேசிய லீக் சாம்பியன் பட்டத்தையும், 2024-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

உலக கோப்பை யாருக்கு?

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சியில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். நடப்பு உலக சாம்பியனும், தென் அமெரிக்க சாம்பியனுமான அர்ஜென்டினாவும், ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினும் இறுதி ஆட்டத்தில் மோதுவது முதல் தடவையாகும்.

7-வது முறை

அர்ஜென்டினா 7-வது முறையாகவும், ஸ்பெயின் 2-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் அர்ஜென்டினா 3 தடவையும், ஸ்பெயின் ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அர்ஜென்டினா 4-வது உலக கோப்பைக்காகவும், ஸ்பெயின் 2-வது பட்டத்துக்காகவும் காத்திருக்கிறது.

இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் உலக கோப்பையை வெல்லப் போவது அர்ஜென்டினாவா? ஸ்பெயினா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com