

பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற 3-வது காலிறுதி போட்டியில் இங்கிலாந்து- நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் ஆக்ரோசமாக விளையாடினார். ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் நார்வே வீரர்கள் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தனர். ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் கோல் அடித்தார். சக வீரர் பாஸ் செய்த பந்தை இடது பக்கம் கோல் எல்லைக்கு அருகில் இருந்து அருமையாக தூக்கி அடித்தார். பந்து கோல் கம்பியில் பட்டு வலைக்குள் சென்றது.
முதல் பாதி நேரத்திற்கான கடைசி நேரத்தில் (45+2) பெலிங்கம் கோல் அடித்தார். சக வீரர் பாஸ் செய்த பந்தை, கோல் எல்லைப் பகுதியில் நார்வே வீரர்களை ஏமாற்றி அருமையாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.
அதன்பின் இங்கிலாந்து வீரர் ஒருவர் கோல் அடித்தார். ஆனால் ஆஃப்சைடு காரணமாக கோல் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் நார்வே கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தது. ஆனால் இங்கிலாந்து வீரரை தள்ளி விட்டதால், பவுல் செய்ததாக கோல் மறுக்கப்பட்டது. இதனால் 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
நாக்அவுட் போட்டி என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 15 நிமிடம் கூடுதல் ஆட்டத்தில் ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் பெலிங்கம் மீண்டும் ஒரு கோல் அடித்தார். சக வீரர் தொலைவில் இருந்து கோல் நோக்கி பந்தை வேகமாக அடித்தார். அதை நார்வே வீரர் தடுத்தார். ஆனால் பந்து கையில் பட்டு நழுவியது. அப்போது அருகில் நின்றிருந்து பெலிங்கம் பந்தை கோல் வலைக்குள் தள்ளினார். இதனால் இங்கிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து 2-1 என நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அர்ஜென்டினா- சுவிட்சர்லாந்து இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இங்கிலாந்து அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தும்.