

காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன். அவர்களை வெற்றி பெற வைப்பீர்களா? முடிவெடுத்து விட்டீர்களா? நிச்சயமாக? உறுதியாக? சத்தியமாக? நன்றி என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறும் தேர்தலில் காங்கயம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதி வேட்பாளராக கயல்விழி செல்வராஜ், பல்லடம் தொகுதி வேட்பாளராக ம.தி.மு.க. சார்பில் முத்துரத்தினம் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரும் வகையில் நான் உங்களை நாடி வந்திருக்கிறேன்.
மு.பெ.சாமிநாதன் ரொம்ப அமைதியானவர். அடக்கமானவர். ஆனால் எந்த பணி என்றாலும் தனி முத்திரை பதிக்கும் ஆற்றல் மிக்கவர். கலைஞர் ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்து பல சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். சிறந்த செயல்வீரரைத்தான் காங்கயம் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக தி.மு.க. அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தாராபுரம் தொகுதி வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடும் கயல்விழி செல்வராஜ் முதுகலை பட்டம் பெற்றவர். மகளிருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக அவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முத்துரத்தினம் 2 முறை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
கம்பீரத்தின் அடையாளமான காளைகள் நிறைந்த இந்த காங்கயத்திற்கு வந்துள்ளேன். தமிழகத்தின் விளை களஞ்சியம் தாராபுரம். பிரிட்டிஷ் காலத்தில் தமிழ் வளர்த்தது பல்லடம். இப்படி பெருமைகளை வாய்ந்த இந்த தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரித்து உங்களின் ஸ்டாலினாக ஆதரவு கேட்டு வந்துள்ளேன்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதோதோ உளற ஆரம்பித்துள்ளார். வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச ஆரம்பித்துள்ளார். தி.மு.க.வை வீழ்த்த எனது உயிரையும் கொடுக்க தயார் என்று பேசியிருக்கிறார். சபாஷ் நான் அவரை பாராட்டுகிறேன். தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட ஒரே மனிதர் எடப்பாடி பழனிசாமிதான்.
தி.மு.க.வை அழிக்க சிலர் நினைக்கிறார்கள். தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள். தி.மு.க. என்னும் பேரியக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க.வை வீழ்த்த இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை. பிறக்கவும் முடியாது. கலைஞருக்கு நான் மட்டும் மகன் அல்ல. இயக்கத்தில் உள்ள அனைவரும் மகன்கள்தான். பல சுள்ளான்கள், அயோக்கியர்கள் அண்ணாகாலம் முதலே தி.மு.க.வை அழிக்கபோகிறோம் என்று கூறி வருகிறார்கள்.
50 வருடமாக இதை கேட்டு வருகிறோம். மத்தியில், மாநிலத்தில் நாம் ஆளுங்கட்சியாக இல்லை. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க.வை வீழ்த்த எத்தனை பேர் ஒன்று கூடி உள்ளார்கள். கலைஞர் இல்லை. அதனை வீழ்த்தி விடலாம் என முட்டாள்கள் நினைக்கின்றனர். 234 தொகுதிகளிலும் கலைஞர் நிறைந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்று கூறுகிறேன். தி.மு.க.வை வீழ்த்த உங்கள் உயிரை தர வேண்டாம். நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும். தி.மு.க. ஆட்சியை பார்க்க நீங்கள் இருக்க வேண்டும்.
பா.ஜ.க. என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கு வர வாய்ப்பில்லை. அவர்கள் வாஷ்அவுட் ஆவது பாராளுமன்ற தேர்தலிலேயே தெரிந்து விட்டது. அதேப்போல் அ.தி.மு.க.வும் ஒரு இடங்களில் கூட வர கூடாது. நான் பொறாமையில் சொல்லவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ., வந்தால் அவர்கள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாகத்தான் இருப்பார்கள். அதனால் அவர்களை சுத்தமாக வாஷ் அவுட் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான் என்ற ரஜினி பட வசனம் போல ஸ்டாலின் சொல்றான். அதை முதல்வர் செய்கிறார். இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதோடு, நீட் திணிப்பு, இந்தி திணப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, சுயமரியாதை இழப்பு போன்றவைகளை மீட்டெடுக்க உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்.
கருத்துகணிப்பு நமக்கு சாதமாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கடைசி வாக்காளரை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்குப்பதிவு செய்யும் வரை நாம் உழைக்க வேண்டும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை சொல்லியுள்ளோம். அதில் சிலவற்றை இங்கு கூறுகிறேன். விவசாயிகளுக்கு 3 வேளாண் சட்டங்களும் தி.மு.க. ஆட்சி வந்ததும் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே அந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இன்னும் எண்ணற்ற திட்டங்களை கூறியுள்ளோம். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.