தாமிரபரணியில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள்

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடினர். சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு
சீவலப்பேரியில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு
Published on

நேற்று 5-வது நாளிலும் ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் புனித நீராடி, ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

இந்த நிலையில் பாபநாசத்தில் தமிழ்நாடு ஐயப்ப சேவா சமாஜத்தை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் ஐயப்ப சுவாமி சிலைக்கு பூஜைகள் நடத்தி தாமிரபரணி ஆற்றில் நீராட்டு நடத்தினர். ஐயப்ப சுவாமி சிலையுடன் ஏராளமான ஐயப்ப பக்தர் கள் அங்கு புனித நீராடினர்.

பின்னர் பாபநாசத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு ஐயப்ப பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். இதேபோல் பாரதீய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நேற்று பாபநாசம் ஆற்றில் புனித நீராடி விளக்கு ஏற்றியும், ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர்.

நெல்லை அருகே சீவலப்பேரியில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்ததையும், இதில் பங்கேற்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மேலும் அவர்கள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, குறுக்குத்துறை மேட்டில் நடைபெற்ற யாகசாலை பூஜையிலும் கலந்து கொண்டனர்.

இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகில் உள்ள ஜடாயு துறை மற்றும் மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் முன்பும் பக்தர்கள் புனித நீராடினர். சிந்துபூந்துறை சிப்தபுஷ்ப தீர்த்த கட்டத்திலும் ஏராளமானோர் புனித நீராடி தாமிரபரணி அன்னையை வணங்கினார்கள்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி துர்க்காம்பிகை கோவிலில் நேற்று காலை வைரவ ஹோமமும், வடுகு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து ஊர்வலமாக பக்தர் கள் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com