பரிபூரண திருக்கோலத்தில் பட்டாபிஷேக ராமர்- செங்கல்பட்டு பெருமாள் கோவில் வரலாறு

இக்கோவிலில் ஆஞ்சநேயர் காலுக்கு கீழ் சனிபகவான் காட்சி தருகிறார். சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக்கொள்ளும் தலம்.
பரிபூரண திருக்கோலத்தில் பட்டாபிஷேக ராமர்- செங்கல்பட்டு பெருமாள் கோவில் வரலாறு
Published on

ராமபிரானுக்கென்று நாடு முழுவதும் பல கோவில்கள் உள்ளது. தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சிறப்பு பெற்ற தலங்களில் செங்கல்பட்டில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலும் அடங்கும். இக்கோவில் மிகவும் தொன்மையானது.

இறைவன்: கோதண்டராமர் , வரதர்

தாயார்: சீதாதேவி , பெருந்தேவித்தாயார்

ஊர்: செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம்.

தல வரலாறு

முன்னர் இக்கோவில் பெருமாள் கோவிலாக இருந்தது. இன்றும் செங்கல்பட்டில், பெருமாள் கோவில் என்று சொன்னால் தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்குள்ள கற்பகிரஹத்தில் பகவான் ஸ்ரீ பட்டாபிராமன் (பட்டாபிஷேக திருக்கோலம்) அருள்பாலிக்கிறார். இவரை கோதண்டராமசாமி என்ற பெயராலேயே அழைக்கின்றனர்.

இவர் வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும், பரதன், சத்ருகன் மற்றும் ஆஞ்சேனையர் ஆகியோர்கள் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள். இக்காட்சியை காண்பதற்கு நமக்கு கோடி கண்கள் வேண்டும். அத்தனை அழகுடன் அனைவரும் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோவிலில் வரதர் மற்றும் பெருந்தேவி தாயார் ஆகியவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த வரதர் சன்னதி கி.பி 1041 ஆண்டு கட்டப்பட்டதாகும்.

முன்பு பட்டாபிராமர் செங்கல்பட்டு கோட்டையில் கோவில் கொண்டு வீற்றருந்தார். அப்போது 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பில் இக்கோயில் தகர்க்கப்பட்டது.

பின் ஸ்ரீ திம்ம ராஜ ஜமீன்தாரால் கி .பி 1768 ஆண்டு வரதர் கோயிலுக்கு ராமர் கோவில்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டு நிறுவப்பட்டது. இவருடைய மகன் செங்கல்வராயன் என்பவராவார். இவர் பெயராலேயே இவ்வூர் செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

சனியின் தாக்கம் குறைய:

இக்கோவிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது காலுக்கு கீழ் சனிபகவானுடன் காட்சி தருகிறார். இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும். சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக்கொள்ளும் இடம் ஆகும்.

திருவிழாக்கள்:

ராம நவமி, ஹனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பயணம்:

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் (0.5 கி.மீ) இக்கோவில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 11:30 வரை

மாலை 5 மணிமுதல் 08:30 வரை

(சனிக்கிழமைகளில் மாறுதலுக்கு உட்பட்டது).

X

Maalai Malar
www.maalaimalar.com