வெனிசுலா நிலநடுக்கம்: 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்

உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்க இடிபாடுகள்
Published on

கடந்த மாதம் வெனிசுலாவை தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என தேசிய சட்டமன்ற தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 24 நாட்கள் கடந்து விட்ட நிலையில், உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5,069 உயிரிழப்பு:

ஜூன் 24-ஆம் தேதியன்று ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களில் 5,069 பேர் உயிரிழந்ததாகவும், இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடலோர மாநிலமான லா குவைராவில் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 17,000 பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் மேலும் கிட்டத்தட்ட 18,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

தொடர் நிலநடுக்கம்:

கடந்த சில தினங்களாக நியூசிலாந்து, மெக்சிகோ என அடுத்தடுத்து நிலநடுக்க சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.3 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, அண்டை நாடுகளான குவாத்தமாலா மற்றும் எல் சால்வடாரிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன.

நிலநடுக்கத்தால் உடனடி சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் 15.2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

முன்னதாக நியூசிலாந்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3-ஆக பதிவானது. எனினும், நல்வாய்ப்பாக இந்த சம்பவங்களில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com