VIDEO: 30 வருஷம் முன்னாடி.. நியூசிலாந்தில் மோடி சொன்ன மப்ளர் கதை இணையத்தில் வைரல்

ஒரு பரம ஏழை கூட வெளிநாட்டு பயணம் செல்லும் அளவுக்கு காங்கிரஸ் ஆட்சி நடத்தியுள்ளது.
VIDEO: 30 வருஷம் முன்னாடி.. நியூசிலாந்தில் மோடி சொன்ன மப்ளர் கதை இணையத்தில் வைரல்
Published on

அரசு முறைப் பயணமாக நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ஆக்லாந்து நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.

கடந்த 40 ஆண்டுகளில் நியூசிலாந்திற்குப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.

இந்த விழாவின் போது, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒரு சாமானியராக நியூசிலாந்து வந்தபோது கிடைத்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை மோடி பகிர்ந்தார்.

மப்ளர் கதை

பிரதமர் மோடி தனது உரையில், தான் அரசியலுக்கு வராத கால கட்டத்தில், அதாவது பொதுவாழ்வில் யாரும் அறியாத ஒரு நபராக 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திற்கு முதன்முறையாக வந்திருந்ததாக குறிப்பிட்டார்.

அந்தப் பயணத்தின் போது உள்ளூர் நியூசிலாந்து நபர் ஒருவர் தனக்கு ஒரு மப்ளர், ஒரு தொப்பி மற்றும் ஒரு ஜோடி கையுறைகளை அன்பளிப்பாக வழங்கியதாக கூறினார்.

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே, தனது கழுத்தில் இருந்த மப்ளரைக் கழற்றிப் பொதுமக்களிடம் காட்டிய பிரதமர் மோடி, "இப்போது எனது கழுத்தில் இருக்கும் இந்த மப்ளர்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நியூசிலாந்து நண்பர் எனக்குக் கொடுத்தது.

இத்தனை ஆண்டுகளாக இதனை நான் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன். உங்கள் அன்பை நான் எப்படி என் நெஞ்சில் சுமக்கிறேனோ, அதேபோல இந்த நினைவையும் பாதுகாத்து வருகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மக்கள் பலத்த கரகோஷங்களை எழுப்பி நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

கேள்வி

குஜராத்தை சேர்ந்த பிரதமர் மோடி தனது இளமைக்காலத்தில் டீ விற்று வந்தது நாடறிந்தது. தனது இளமைக்கால ஏழ்மை நிலை குறித்து மோடி பலமுறை பேசியுள்ளார். தன்னை, ஏழைத்தாயின் மகன் என அவர் அடையாளப்படுத்தினார்.

அப்படியிருக்க, மோடி 30 வருடங்கள் முன் நியூசிலாந்துக்கு எப்படி பயணம் சென்றார் என இணையத்தில் பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

ஒருவர் கிண்டலாக, ஒரு பரம ஏழை கூட வெளிநாட்டு பயணம் செல்லும் அளவுக்கு காங்கிரஸ் ஆட்சி நடத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் மோடியின் பயணத்திற்கு ஆர்எஸ்எஸ் நிதியளித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும் மோடியின் மப்ளர் கதை இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com