ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: டாக்கா நிகழ்ச்சியில் தவறான வரைபடத்தை சுட்டிக்காட்டிய இந்திய அதிகாரி

டாக்காவில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ஆசிய வரைபடம் ஒன்றில் ஜம்மு-காஷ்மீர் பகுதி தவறாக காண்பிக்கப்பட்டிருந்ததால் இந்திய அதிகாரி அதை சுட்டிக்காட்டினார்.
அகமது தரிக் கரீம்- பூஜா குமாரி ஜா
அகமது தரிக் கரீம்- பூஜா குமாரி ஜா
Published on

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள வங்கதேசம் சர்வதேச மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் (BIISS) கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்திய தூதரக பெண் அதிகாரி பூஜா குமாரி ஜா கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஷமா ஒபாயத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

நம்பிக்கையை மீட்டெடுத்தல், பிராந்திய ஒருங்கிணைப்பைப் புதுப்பித்தல், சார்க் (SAARC) அமைப்பிற்குப் புத்துயிர் அளிப்பதற்கான வழிகள் என்ற தலைமைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலந்துரையாடலில் இந்தியாவுக்கான வங்கதேச முன்னாள் தூதர் அகமது தரீக் கரீம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது வங்கதேச நாட்டிறக்ான இந்திய தூதரக அதிகாரி பூஜா குமாரி ஜா, திடீரென குறிக்கிட்டு இங்கு வைக்கப்பட்டுள்ள வரைபடம் சரியானது அல்ல. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஆனால், வரைபடத்தில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. இது தவறானது என்று சுட்டிக்காட்டினார்.

அதற்கு கரீம் வரைபடம் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே என்றும், அது உண்மையான எல்லைகளை குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகும்

அதற்கு இந்திய அதிகாரி பூஜா குமாரி ஜா "நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகும். இங்கு அது தவறாகச் சித்தரிக்கப்படுகிறது. எனவே, அதைச் சுட்டிக்காட்டவே நான் விரும்பினேன்" என்று அவர் கூறினார்.

உடனே கரீம், அவர் இந்தியாவைச் சேர்ந்தவரா என்று கேட்டார். அதற்கு பூஜா குமாரி ஜா, தான் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இரண்டாம் செயலாளராக பணியாற்றுகிறேன்" என்றார்.

அதனைத் தொடர்ந்து கரீம் "நீங்கள் சுட்டிக்காட்டியது கவனத்தில் கொள்ளப்பட்டது," என்று அவர் பதிலளித்தார்.

பின்னர் கரீம் தனது உரையாடலை தொடர்ந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com