காசாவில் 10 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்.. வான்வழித் தாக்குதலில் மேலும் 8 பேர் பலி

அவன் ஒரு கூடாரத்திற்குள் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறுவன் முவாதாஸ் அபு ஷார் இறுதிச்சடங்கு
சிறுவன் முவாதாஸ் அபு ஷார் இறுதிச்சடங்கு
Published on

பாலஸ்தீனத்தின் காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வயதுச் சிறுவன் உட்பட 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறுவன் கொலை

தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், முவாதாஸ் அபு ஷார் என்ற 10 வயதுச் சிறுவன் கொல்லப்பட்டான்.

சிறுவனின் அத்தை இதுகுறித்து பேசுகையில், "அவன் கையில் என்ன துப்பாக்கியா இருந்தது? அவன் ஒரு கூடாரத்திற்குள் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு வாழவும், மகிழ்ச்சியாக இருக்கவும், விளையாடவும் உரிமை இல்லையா?" என கண்ணீருடன் கேள்வி எழுப்பினார்.

கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

காவல் நிலைய தாக்குதல்

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஜபாலியா பகுதி காவல் முகாமின் தலைவரான கர்னல் முகமது மர்வான் சலீம் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள், ஒரு பெண் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொல்லப்பட்ட முகமது மர்வான் சலீம், ஹமாஸ் அமைப்பின் ஜபாலியா மத்தியப் படைப்பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்ததாகவும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதால் அச்சுறுத்தலை தவிர்க்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காவல்நிலைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒருவரின் தாய், தன் பிள்ளை உடல் மேல் விழுந்து அழுவது
காவல்நிலைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒருவரின் தாய், தன் பிள்ளை உடல் மேல் விழுந்து அழுவது

அமைதி திட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமல்படுத்துவது குறித்து எகிப்தின் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதே இந்த அமைதித் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் பெரும் தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் 1,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், இதே காலகட்டத்தில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 4 இஸ்ரேலிய வீரர்களும் பலியாகியுள்ளனர்.

2023 அக்டோபர் 7 அன்று தொடங்கிய இந்த ஒட்டுமொத்த போரில் இதுவரை காசாவில் 73,00க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com