ரத்தத்துக்கு ரத்தம்.. சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம் - ஈரான் வைக்கப்பட்ட விளம்பர பலகையால் பரபரப்பு

"மினாப் குழந்தைகளின் நினைவாக" என்று எழுதப்பட்டிருந்தது.
தெஹ்ரான்
தெஹ்ரான்
Published on

ஈரானில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், "ரத்தத்திற்கு ரத்தம்" என அடைமொழியிடப்பட்டு தலைநகர் தெஹ்ரானில் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது.

விளம்பர பலகை

டெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விளம்பர பலகையில், டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் அவர்களின் ஐந்து பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோர் வெள்ளை மாளிகையின் பின்னணியில் சவப்பெட்டிகளின் மேல் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள மிகப்பெரிய சுவரோவியங்கள் அனைத்தும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய ஓவ்ஜ் கலை மற்றும் ஊடக அமைப்பு மூலம் வடிவமைக்கப்படுகின்றன.

பழிக்கு பழி

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது மகள், மருமகன், மருமகள், பேத்தி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

அவர்களின் இறுதிச்சடங்கு இந்த மாத தொடக்கத்தில் நடந்து முடிந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அங்கும் டிரம்ப்புக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. பதாகைகளை சுமந்து மக்கள் ஊர்வலம் வந்தனர். இறுதிச்சடங்கு முடிந்து உடல் அடக்கம் செய்யப்பட்ட அதே வேளையில் ஈரான் - அமெரிக்கா இடையேயான தற்காலிக புரிந்துணர்வு முறிந்து மீண்டும் முழு அளவிலான போர் வெடித்துள்ளது.

ஈரானின் பாலங்கள், மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அமெரிக்கா 7வது நாளாக குறிவைத்து தாக்கி வருகிறது. அதேநேரம், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

டிரம்பைக் கொல்வோம்

சில நாட்களுக்கு முன்புதான், தெஹ்ரானின் ஏங்கெலாப் சதுக்கத்தில் மற்றொரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

அதில், டிரம்ப் ஒரு திறந்த கருப்பு சவப்பெட்டிக்குள் படுத்திருப்பது போலவும், அதற்கு மேலே பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் "நாங்கள் டிரம்பைக் கொல்வோம்" என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.

அந்த சவப்பெட்டியின் மேல், "மினாப் குழந்தைகளின் நினைவாக" என்று எழுதப்பட்டிருந்தது.

பிப்ரவரி 28 அன்று தெற்கு ஈரான் நகரமான மினாப்பில் உள்ள பெண் குழந்தைகள் ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 170 சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த வான்வழித் தாக்குதல் இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் இது அமெரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதல் என பின்னர் தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com