அமெரிக்கா காட்டிய வழித்தடம்; கண்ணிவெடியில் சிக்கிய 2 கப்பல்கள்: ஈரான் குற்றச்சாட்டு!

கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்களின் நிலைமை குறித்து தகவலை ஈரான் வெளியிடவில்லை.
2 ships caught in landmines
Published on

அமெரிக்கா-ஈரான் இடையேயான மத்திய கிழக்கு போரில் கடந்த மாதம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் மோதல் வெடித்து உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து விட்டதாக இரு நாடுகளும் அறிவித்துள்ள தால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் முக்கிய காரணமாக உள்ளது. அந்த ஜலசந்தியை தாங்கள்தான் கட்டுப்படுத்துவோம் என்றும் தாங்கள் அறிவித்துள்ள பாதையில்தான் கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே ஓமன் கடற்கரைக்கு அருகே பயணித்த கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க கடற்படையின் வழிகாட்டுதலின்படி கப்பல்கள் ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தியதால் தாக்கியதாக ஈரான் தெரிவித்தது.

இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்கி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய சில நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணி வெடிகளை புதைத்தது. தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தின்போது அந்த கண்ணி வெடிகள் அகற்றப்படும் என்று தெரிவித்தது. ஆனால் இன்னும் பல கண்ணி வெடிகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வகுத்துள்ள பாதையில் செல்ல வேண்டும் என்று ஈரான் தெரிவித்தது.

இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க உளவுத்துறையினரால் தவறாக வழிநடத்தப் பட்டதாலேயே அந்த கப்பல்கள் அப்பகுதி வழியாக செல்ல முயன்றதாக ஈரான் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை கூறியதாவது:-

அமெரிக்க உளவுத்துறையினரின் ஏமாற்று நடவடிக்கையால், ஹார்முஸ் ஜலசந்திக்கு தெற்கே உள்ள கண்ணிவெடிகள் நிறைந்த பகுதி வழியாகச் செல்ல முயன்ற 2 எண்ணை கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி வெடித்துத் தீப்பிடித்தன. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் பாதுகாப்பற்றதாகவும் முழுமையாக மூடப்பட்டதாகவும் இருக்கும்.

தங்கள் சொத்துகளையும், மிக முக்கியமாகத் தங்கள் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள கண்ணி வெடிகள் நிறைந்த பகுதிக்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்தது. அதேபோல் கண்ணிவெடிகள் உள்ள பாதையில் நுழைவதற்கு முன்பு ஈரான் கடற்படையின் எச்சரிக்கைகளை 2 கப்பல்களும் புறக்கணித்ததாகவும், அதனால் வெடிப்புகளும், பெரிய தீ விபத்துகளும் ஏற்பட்டதாகவும் ஈரானின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி தெரிவித்தது. கண்ணி வெடியில் சிக்கிய கப்பல்களின் நிலைமை குறித்து தகவலை ஈரான் வெளியிடவில்லை.

அமெரிக்கா மறுப்பு:

கண்ணிவெடியில் கப் பல்கள் சிக்கியதாக ஈரான் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை பிரிவு கூறும்போது, ஈரானின் குற்றச்சாட்டு பொய்யானது. இது சரிபார்க்கப்படாத ஈரான் ராணுவத்தின் வழக்கமான தகவல்களில் ஒன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஈரானில் உள்ள ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து 7-வது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெக்ரான் உள்பட பல்வேறு நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டன. லாரக் தீவில் உள்ள கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் கோபுரம் தகர்க்கப்பட்டது. அதேபோல் ஈரானின் கார்க் தீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் தெற்குப் பகுதியிலுள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 பேர் பலியானார்கள்.

இதற்கிடையே வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பக்ரைன், குவைத், ஜோர்டா னில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள்-டிரோன்கள் வீசப்பட்டன. அதேபோல் சவுதி அரேபி யாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. அங்கு அமெரிக்க எரி பொருள் நிரப்பும் விமானங்களை நிறுத்த சவுதி அரேபியா இடமளித்திருந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com