

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையின்படி,
ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமான தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் அதன் கட்டளை மையம் மற்றும் அதிநவீன எம்கியூ9 ரீப்பர் டிரோன்கள் நிறுத்தப்பட்டிருந்த ஹேங்கர்களை அழித்ததாக ஈரான் கூறியுள்ளது.
கத்தாரில் உள்ள மிகப்பெரிய அமெரிக்கத் தளமான அல் உதைத் மீதும், போர் விமானப் பராமரிப்பு மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஓமனின் துக்ம் துறைமுக நகரில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கான தளவாட மற்றும் எரிபொருள் நிரப்பும் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, ரேடார் தளம் மற்றும்
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தகவல் தொடர்பு மையங்களையும் தற்கொலை டிரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் தனது தலையீடுகளை நிறுத்தும் வரை எந்தவொரு கப்பலும் இதன் வழியே செல்ல அனுமதிக்கப்படாது என ஈரான் எச்சரித்துள்ளது.
இதனிடையே அமெரிக்கா, "ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை, கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளது.
நேற்று தனது அதிகாரபூர்வ டெலிகிராம் பக்கத்தில் ஈராபி உச்சதலைவர் மொஜ்தபா காமேனி வெளியிட்ட அறிக்கையில்,
"எங்கள் புனிதமான தலைவர் மற்றும் போரில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த அனைத்து தியாகிகளின் தூய இரத்தத்திற்காக, அந்த கொடூரமான குற்றவாளிகளை பழிவாங்குவோம் என நாங்கள் சபதம் செய்கிறோம்.
நாங்கள் அந்த இடத்தில் நேரில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற நிச்சயம் பழிவாங்கப்படும்.
விரைவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு சுதந்திரமான மனிதனும் இந்த தெய்வீகப் பணியின் ஒரு பகுதியை நிறைவேற்றுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தந்தையும், ஈரானின் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி காமேனியின் நினைவாக, வரும் ஜூலை 23 அன்று தெஹ்ரானில் ஒரு பெரிய நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இதுவரை வெளியுலகுக்கு வராமல் இருந்த அவர், இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்கவுள்ளார் என ஈரான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.