

பாகிஸ்தான் தலைமையில் கடந்த மாதம் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தமான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்' இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி கூறுகையில்,
"அமெரிக்கா 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' விதிகளை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ஈரான் தொடர்ந்து பின்பற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்களும் இதன் செயல்பாடுகளை நிறுத்துகிறோம். தற்போதைய சூழலில், ஈரானின் முழுக் கவனமும் நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தகர்த்துள்ளன.
இந்தத் தாக்குதலால் சுமார் 20 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு 10,000க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
இதுதவிர, மின் உற்பத்தி நிலையங்கள், இரண்டு முக்கிய சுரங்கப்பாதைகள் மற்றும் ஒரு பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளதால், முக்கியத் துறைமுக நகரான பந்தர் அப்பாஸை இணைக்கும் முதன்மை சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
ஈரான் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, ஜூலை 6 முதல் தொடங்கி நடைபெற்று வரும் அமெரிக்க தாக்குதல்களில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க படை தளங்களை கொண்டுள்ள நட்பு நாடான குவைத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தின் 90 சதவீதக் குடிநீர் இந்த ஆலைகளிலிருந்தே பெறப்படுகிறது.
ஈரானின் இந்தத் தாக்குதலால் குடியிருப்புப் பகுதிகளில் ஏவுகணைத் துண்டுகள் விழுந்தபோதிலும், பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என விளக்கம் அளித்த குவைத் வெளியுறவு அமைச்சகம் சர்வதேச சட்டங்களை மீறிச் செயல்படுவதாக ஈரானை கண்டித்துள்ளது.
மேலும் ஈரானின் இந்தத் தாக்குதலால் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சேதமடைந்து பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மத்திய கிழக்குக்கான அமெரிக்க பாதுகாப்பு துறை கட்டளை பிரிவான சென்ட்காம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
ஜூலை 17 அன்று ஈரானிய படைகளால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தற்கொலைப்படை டிரோன்களை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகள் வானிலேயே சுட்டு வீழ்த்தித் தடுத்துக் கொண்டிருந்தன.
இந்த நடவடிக்கையின்போது, துரதிர்ஷ்டவசமாக இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
மேலும், மற்றொரு அமெரிக்க வீரர் தற்போது வரை மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது" பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின் போது அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.